கறுப்பு ஜூலை சம்பவத்துக்கு தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.
அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறைவேற்றுத்துறையின் ஒருசில அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளேன்.இச்சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடனும்,சுயாதீன தரப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எதிராகச் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படலாம்.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டன.இவ்விடயம் குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சு அறிவியல் ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கைக்கு அமைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நான் ஒன்றிணைந்து கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.அத்துடன் கவலையடைகிறோம்.
1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கரும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த சம்பவங்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. இருப்பினும் நாட்டு பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.