உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் ரவி செனவிரத்ன பொறுப்புக் கூறவேண்டும்.-- உதய கம்மன்பில தெரிவிப்பு

2 months ago



உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளருமான ரவி செனவிரத்ன பொறுப்புக் கூறவேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை வெளிப்படுத்தும் நோக்கில் கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க வெளியிட வேண்டும் என உதய கம்மன்பில கடந்த திங்கட்கிழமை கோரிக்கை விடுத்ததுடன், அதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

எனினும், அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத், உதய கம்மன் பிலவிடம்        அறிக்கைகள் காணப்படுமாயின், மூன்று நாட்களுக்குள் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், அவ்வாறான         அறிக்கைகளை மறைத்து வைத்திருந்தலானது பெரும் குற்றச் செயலாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னணியிலேயே ஊடக சந்திப்பு ஒன்றை நேற்று நடத்திய உதய கம்மன்பில பல்வேறு தகவல்களை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை வெளியிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸ நாயக்கவுக்கு நான் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருந்தேன்.

அந்த அவகாசம் இன்று (நேற்று) காலை 10 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

அதனால் என்னுடைய கடமையை நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

முதலாவது விசாரணைக் குழுவின் அறிக்கையும் இரண்டாவது விசாரணைக் குழுவின் அறிக்கையும் என்னிடம் உள்ளன.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. என். ஜே. டி. அல்விஸ் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட விசாரணைக் குழு 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏன் மறைப்பதற்கு முயற்சிக்கிறது? அதற்கான விடை இந்த அறிக்கையில் உள்ளது.

அறிக்கையின் 40ஆவது பக்கத்தில் தகவல் தரப்பட்டுள்ளது.

மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட தௌஹீத் ஜமாஅத் குழுவினரால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதென வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரால் தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக 2019 ஏப்ரல் ஒன்பதாம் திகதி அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரினால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யார் இந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்?

அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரால் அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தாக்குதல் நடத்தவுள்ளோர் யார்?

அவர்களது அடையாள அட்டை இலக்கங்கள், தொலைபேசி இலக்கங்கள், விலாசம். வழமையாக நடமாடும் இடங்கள். பழகும் நபர்கள் என அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு சிலர் இரவு நேரங்களில் தங்கியிருந்து செல்லும் இடங்களும் அந்தக் கடிதத்தில்                       குறிப்பிடப்பட்டுள்ளன.

அவ்வாறு ஏராளமான தகவல் நிறைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 09ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட போது ரவி செனவிரத்ன      வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அவர் மீண்டும் இலங்கைக்கு வந்து ஏப்ரல் 16 ஆம் திகதியே அந்தக் கடிதத்தை வாசித்துள்ளார்.

இது தொடர்பில் ஏனைய உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது இரகசியம் பேணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு தனக்கு அனுப்பப்படும் கடிதங்களை தான் வரும் வரை மேசையின் மீது வைக்குமாறு ரவி செனவிரத்ன பணித்துள்ளாரெனக் கூறியுள்ளார்கள்.

ரவி செனவிரத்னவின் சட்டவிரோத செயல்பாடு காரணமாக அந்தக் கடிதம் மேசையின் மீது வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படும் வரை இந்தக் கடிதம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாகஹமுல்லவுக்கு கிடைக்கப் பெறவில்லை.

ஆகவே, ரவி செனவிரத்னவின் கவனவீனம் காரணமாகவே தாக்குதலை தடுக்க முடியாமல் போனது எனவும் அதனால் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிக்கையின் 41ஆவது பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரவி செனவிரத்னவுக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீதும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அல்விஸ் அறிக்கையின் 14ஆவது பக்கத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த அறிக்கையை ஏன் மறைக்க வேண்டும்? நாம் இந்த அறிக்கையை இன்று வெளிப்படுத்தாவிட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு ஜனாதிபதியால் முடியுமாக இருந்திருக்கும்.

தேர்தலின் போது தமக்கு உதவிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி இந்த அறிக்கைகளை மறைக்க முயற்சித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து ரவி சென விரத்ன உடனடியாக பதவி நீக்கப்பட வேண்டும்.

இதேவேளை மற்றுமோர்     அறிக்கையின் விபரங்களை எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடத் தயாராக இருக்கிறேன்- என்றார்.