எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் நேற்றும் பல முறைப்பாடுகள்

1 month ago



யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் நேற்றும் பல முறைப்பாடுகள் முன்வைக் கப்பட்டுள்ளன.

10ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது பாராளுமன்ற மரபுகளுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த சம்பவம் சமூகத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கன்னி அமர்வின் பின்னர் அவர் சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகளைப் பதிவிட்டிருந்தார்.

அவற்றில் சில காணொளிகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், அவருக்கு எதிராக சுவர்ணபூமி தேசிய இயக்கம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிரிவினைவாதக் கருத்துக்களை முன் வைத்து வருவதாக சுவர்ணபூமி தேசிய இயக்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவரை பாராளுமன்ற  உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவநம்பிக்கை         பிரேரணை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், சமூக செயற்பாட்டாளர்களான பாலித்த லக்ஷ்மன், சிவில் சமூக செயற்பாட்டாளர் குணரத்ன அதிகாரி மற்றும் சமூக  செயற்பாட்டாளர் நாமல் குமார உள்ளிட்டோரும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற      சம்பிரதாயத்திற்கு ஏற்ற வகையில் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்