இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இன்று (26) கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இன்று (26) கொண்டாடப்பட்டது.
உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 1950 ஜனவரி 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளலாம்.
இந்த அரசியலமைப்பின் முன்னுரையானது இந்தியாவை ஒரு இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு எனப் பிரகடனப்படுத்துகிறது.
இத்தருணத்தில் இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் பதில் உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் இந்தியாவின் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார்.
அத்துடன் இந்திய ஜனாதிபதி அவர்களது குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்களும் பதில் உயர் ஸ்தானிகரால் இங்கு வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் இலங்கை கடற்படையினரின் இசைக் குழாமினர் பாடல்களை இசைத்திருந்த அதேசமயம் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒரு கலாசார நிகழ்வினையும் ஒழுங்கமைத்திருந்தது.
நடன மற்றும் இசை ஆற்றுகைகள் மூலமாக இந்தியாவின் செழிப்பான பன்முகத்தன்மை இங்கு கொண்டாடப்பட்டிருந்தது.
“பல்வேறு மாநிலங்கள் ஒரே உணர்வு; இந்தியா” என்ற தொனிப் பொருளின் கீழ் இந்திய கலாசார சங்கத்தினால் இந்திய சமூகங்களை சேர்ந்த சிறுவர்களை ஒன்றிணைத்து தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டிருந்தன.
அதேபோல சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் மாணவர்கள் இந்திய தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு நடன ஆற்றுகை ஒன்றையும் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் இந்திய சமூகத்தின் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை முன்னதாக பதில் உயர் ஸ்தானிகர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபியில், உயிர் தியாகம் செய்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தி இருந்தனர்.
இன்று மாலை இந்திய இல்லத்தில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு உபசாரம் ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சகல துறைகளையும் சேர்ந்த பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதனை இந்த வருடத்தின் குடியரசு தினம் குறித்து நிற்கும் அதேவேளை ‘இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசார நெறிமுறைகளைப் பாதுகாத்து, நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை வெற்றிகொள்ளல்” என்ற இளம் இந்தியாவின் உறுதிப்பாட்டினை தொனிப்பொருளாக கொண்டு இக்கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சூலேட் ஜெனரல் காரியாலயங்கள் ஆகியவையும் விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தினை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.