கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடனும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (02.08.2024) ஆரம்பமாகியுள்ளதோடு நாளைய தினமும் நடாத்தப்படவுள்ளது.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர்.
வெபர் மைதானத்தில் இலங்கை, இந்தியா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் கலைஞர்களின் வருகையுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கலைவிழா ஆரம்பமானது.
விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றததை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் அவர்களுக்கும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வு தொடர்பான விசேட மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து கருத்தரங்குகள் இடம்பெற்றது முதல் நாளுக்கான தமிழ் கலை விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.