யாழ்.சாவகச்சேரி மருத்துவமகையில் மருத்துவ நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு

2 weeks ago



யாழ்.சாவகச்சேரி மருத்துவமனையில் முன்பு இருந்த நிலையை விடவும் மருத்துவ நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மருத்துவமனை பொது மருத்துவ நிபுணர்கள் இல்லாமல் தற்காலிக மருத்துவர்களுடன் இயங்கி வருகின்றது என்றும், இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது மருத்துவ நிபுணர்கள் முற்றாக இல்லாததால், இரண்டு பொதுமருத்துவ நிபுணர்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் தற்காலிகமான அடிப்படையில் சேவையாற்றி வருகின்றனர் என்றும், நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையின் வினைத்திறனான செயற்பாடுகளில் பெருமளவில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மருத்துவர்களும் அதீத வேலைப்பளுவில் பணியாற்றுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவர் பற்றாக்குறை காரணமாக, டெங்குத் தொற்று மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற பெருந்தொற்றுகள் ஏற்பட்டால் மருத்துவ நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும், மருத்துவர்களுக்கு இருக்கும் பற்றாக்குறை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், சாவகச்சேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இன்மையால், யாழ்ப்பாணம் போதனாவுக்கு வருகைதரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும், கூடுதல் அழுத்தத்தின் கீழ் இயங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போதனா மருத்துவமனையும் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மருத்துவமனைக்கு எதிராக, அண்மைக்காலமாக முன்வைக் கப்பட்ட கண்மூடித்தனமான விமர்சனங்கள் காரணமாகவே,பல மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்றும், இன்னும் பலர் அங்கு சேவை செய்வதற்கு வருகை தரப் பின்னடிக்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.