யாழ். மிருசுவில் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு 5 வயது சிறுவன் உட்பட 8 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட சம்பவம் அன்றைய யாழ்ப்பாணத்தை பதற வைத்த சம்பவம். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க ஒரு குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, மரண தண்டனை விதித்தது.
ஆனால் சிங்கள பெரும்பான்மை வாக்குகளோடு ஆட்சிக்கு வந்து கோரத்தாண்டவமாடிய கோத்தாபய ராஜபக்ச, சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பில் விடுவித்தார்.
மனித படுகொலைகளில் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டும், பொதுமன்னிப்பு மூலம் தனது நன்றிக்கடனை கோத்தாபய சிங்கள தேசத்துக்கு வெளிக்காட்டிய சந்தர்ப்பம் அது.
காலம் கோத்தாபாயவை துரத்தியடித்தாலும், கோத்தாபாயவின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட தரப்பாகிய மிருசுவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகளின் மனக் கவலையும்- நீதி கோரும் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பும் ரணங்களால் சூழ்ந்தது.
இந்த வேளையில் கோத்தாபய எடுத்த பொதுமன்னிப்பு முடிவை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு எடுக்கப்ட்ட வேளை, பிரதிநிதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கோரினார்.
மீண்டும் வழக்கு செப்டம்பர் எடுக்கப்படும்போது கோத்தாபய நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்.
ரோம் சட்டத்தில் கையொப்பமிடாது சர்வதேச நீதிவிசாரணையில் தப்பித்தாலும், இலங்கை சட்டத்திலும் அவர்கள் மீது விசாரணை இடம்பெற்று வருகின்றன.