தர்மத்தில் யார் சிறந்தவர் என்ற விவாதத்தில், கர்ணன் கொடைவள்ளல் என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஏற்கவில்லை அர்ஜீனன். இருவரும் கர்ணனிடம் சென்றனர்.
கர்ணனின் தங்கக் கிண்ணங்களைக் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். தனது இடது கையில் இருந்த கிண்ணங்களை வலது கைக்கு மாற்ற முதல் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்தான்.
இடது கையால் தானம் செய்வதா என்று கேட்க, தர்ம சிந்தனை மாற முதல் தானம் செய்தேன் என்றார்.
கொடை, ஈகை, தானம், தர்மம், எல்லாம் சத்தமின்றி பிறர் அறியாத வண்ணம் தரப்பட வேண்டியவை. ஊரறியும் வண்ணம் தம்பட்டம் அடித்து தரக் கூடாதவை.
இதைத் தான் "வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது" என கூறுவார்கள்.
வசதி படைத்த பாடசாலை, வைத்தியசாலைகளுக்கு உதவி செய்பவர்கள் வன்னியில் வசதி படைக்காத பாடசாலை, வைத்தியசாலைகளுக்கு உதவி செய்ய முன்வருகிறார்கள் இல்லை. ஏன் என்று பார்க்கிறியளா? அதுதான் விளம்பரம்.
வன்னியில் பல ஊர்களில் பல பிரச்சினைகள் இருப்பதை அறிந்தோம். சில பாடசாலைகளுக்கு குடிதண்ணீர் வசதியில்லை. போக்குவரத்து வசதியில்லை. மருத்துவ வசதியில்லை, தங்குவதற்கு சீரான வீடு இல்லை.
இந்தப் பிரதேசங்களுக்கு கோடிக்கணக்காக உதவி செய்கின்றோம் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் உதவி செய்வார்களா?
உதவி செய்கின்றவர்களை ஒரு போதுமே குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் செய்யும் பெரிய உதவியோ சிறிய உதவியோ போய்ச்சேர வேண்டியவர்களின் கைகளில் போய்ச் சேர்ந்தால் அந்த உதவி கடவுளுக்கு சமனாகும்.
இன்றைய காலப் பகுதியில் கஷ்ரப்படுகின்றவர்களை வெளியே பார்க்கும் போது தெரியாது.
அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளையும், கையில் வைத்திருக்கும் போனையும் பார்த்து இனங்காண முடியாது. அவர்களிடம் கதைக்கும் போது தான் தெரியவரும். அவர்களின் கஷ்ர நிலைமை.
அந்த நாட்களில் உதவி செய்வது எவருக்கும் தெரியாது. அதாவது வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதபடி பார்த்துக் கொள்வார்கள்.
உதவி பெறுகின்றவர்களின் முகத்தை யார் என்று தெரியாத அளவுக்கு மறைத்திருப்பார்கள்.
இந்த நாள் அப்படி அல்ல யூரியூப் மூலம் தாங்கள் உதவி செய்வதைக் காண்பித்தும், உதவி பெறுகின்றவர்களின் முகங்களையும் காண்பிக்கிறார்கள். விளம்பரம் தேடுகின்றார்கள்.
அல்லது வரி செலுத்த வேண்டி வரும் என்பதற்காக சிறு உதவி செய்து விட்டு பெரிய உதவி செய்ததாக வெளிக்காட்டுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
பல கோடி ரூபாய் உதவி செய்ததாக யூரியூப் சொல்கிறது. அவர்களும் கூடச் சொல்கிறார்கள்.
உதவி கேட்டு வருபவர்களிடம் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை காக்க வைத்து நோகடிக்காதீர்கள். உங்களால் முடிந்த உதவியைத் தான் செய்ய முடியும்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் உங்களால் உதவி செய்ய முடியாது. எல்லோருக்கும் உதவி செய்வதாக விளம்பரம் செய்து ஒவ்வொரு நாளும் உங்கள் வாசலில் 5,10 பேரை நிற்க வைக்காதீர்கள்.
கோவில்களில் விளக்கு போடுறேன் என்று கடவுளை வேண்டிக் கொண்டு ஒரு ரியூப் லைட் வாங்கி கொழுவி விடுவார்கள். ஆனால் அதன் வெளிச்சத்தை மறைக்கும் அளவுக்கு உபயம் இன்னார் என்று பெயரை எழுதி வைப்பார்கள்.
ஒரு வெளிநாட்டவர் காரில் வீதியில் சென்று கொண்டிருக்கிறார். சிவப்பு சிக்கல் விழுகிறது காரினை நிறுத்துகின்றார்.
அந்த வீதியில் வந்தவர்கள் தமது வாகனங்கள், பதாதைகள் மூலம் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறார்கள். அவர் அழுகிறார். அவரை காரில் இருந்து இறக்கி எல்லோரும் அணிவகுத்து நின்று மரியாதை செய்கிறார்கள்.
இவர் தனது சொத்துகளையும், தான் மாதம் மாதம் உழைக்கும் கோடிக்கணக்கான சம்பளத்தையும் அங்கே கல்வி கற்க வசதியில்லாத பல இலட்சம் பிள்ளைகளுக்கு வழங்கி அவர்களை படிக்க வைக்கிறார்.
இந்த விடயம் எவருக்குமே தெரியாது. இவரை எவரும் பாராட்டியதும் கிடையாது. இவரை அறிந்தவர்கள் இவர் வீதியில் செல்வதை அறிந்து அந்த ஒரு இடத்தில் சிவப்பு சிக்னலில் காரை நிற்பாட்டியதும் அவரை சூழ்ந்து பாராட்டி மரியாதை செய்தனர்.சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இவர் போல் இருப்பார்களா?