பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடியால் இலங்கையரை திருமணம் செய்ய மறுக்கும் வெளிநாட்டவர்

3 weeks ago





பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடியால் இலங்கையரை திருமணம் செய்ய மறுக்கும் வெளிநாட்டவர்

சாதாரண ஒரு பிரஜை திருமணம் செய்து வெளிநாட்டுக்குச் செல்வதற்கு உரிமை உள்ளது.

ஒருவர் தனது திருமணத்தினை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிபெற வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டங்கள் இல்லை.

எனவே இங்குள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை பதிவாளர்கள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பதிவாளர் நாயகம் மற்றும் பதிவாளர்களுக்கிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வெளிநாட்டுத் திருமணங்கள் பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளால் இடைநிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்கள் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

வெளிநாட்டுத் திருமணம் ஒன்றை நடத்துவதற்கு குறைந்தது 14 நாள்கள் செல்லுகின்றன.

குறிப்பாக பாதுகாப்பு அமைச்சிடம் சென்று அனுமதி பெற்று வருவதற்கு இவ்வாறான நாள்கள் வீண் விரயமாகின்றன.

இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இடைநிறுத்தப்பட வேண்டிய சூழல் எழுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ராஜபக்ச அரசாங்கத்தால் இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.

உண்மையில் பாதுகாப்பு அமைச்சுக்கும் வெளிநாட்டுத் திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஒருவர் தனது திருமணத்தை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டங்கள் இல்லை.

ஆகவே இந்த முறைமை பதிவாளர் திணைக்களத்துக்கு மாற்றப்பட வேண்டும் குறைந்தது 7 நாள்களுக்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் இந்த மாவட்டத்திலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாக ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும் - என்றார்.

அண்மைய பதிவுகள்