ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரிகளின் கோரிக்கையை கிழக்கு ஆளுநர் நிராகரிப்பு

2 months ago



ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரிகளின் கோரிக்கையை கிழக்கு ஆளுநர் நிராகரித்துள்ளார்.

அத்தோடு, வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு தோற்றி நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் இடையே திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, பட்டதாரிகள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் தங்கள் பிரச்னைகளை முன்வைத்தனர்.

மேலும், அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. இந்தப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்கால ஆட்சேர்ப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இத்தகைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நிரந்தரத் தீர்வை வழங்க முடியாது என்றும், அவர்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

இந்த நியமனங்களில் பல தரப்பினர் ஆர்வமாக இருப்பதால், அனைவருக்கும் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும், நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களின் பிரச்னைகளை ஆராய்வதற்காக மாகாண கல்விச் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அடங்கிய மேன் முறையீட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகளின் பிரச்னைகளை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.