இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கலைப்பொக்கிஷங்களை திருப்பிக் கொடுத்தது அமெரிக்கா.

3 months ago


இந்தியாவில் இருந்து ஏராளமான கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் உட்பட ஏராளமான அரிய பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு தற்போது பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் அரிய கலைப் பொருட்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு மீண்டும் ஒப்படைத்துள்ளது.

இவற்றையும் சேர்த்து கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 640 இந்திய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 578 கலைப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது, 157 இந்திய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு ஒப்படைத்தது.

அவற்றில் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலையும் அடங்கும்.

அதேபோல் கடந்த 2023ஆம் ஆண்டு 105 அரிய கலைப் பொருட்களை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்தது.

இதேபோல் பிரிட்டனில் இருந்து 16, அவுஸ்திரேலியாவில் இருந்து 40 அரிய கலைப் பொருட்கள் மீட்டு வரப்பட்டன.