வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது.-- கேணல் நளின் ஹேரத் தெரிவிப்பு

2 months ago



வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. 

அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே இது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் -

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்தார்.

சிறீஜெயவர்த்தனபுர கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கிலுள்ள முகாம்களை     அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?" என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முகாம்களை அகற்றுவதாயின்   அதற்கென வழிமுறை உள்ளது.

அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி -தோலகட்டி சந்தி வரையிலான வீதி சுமார் 3 தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதி முதல் திறக்கப் பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையை பின்பற்றி எடுக்கப்படும்.

பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசணையுடன் முப்படையும் பொலிஸாரும் செயல்பட்டு வருகின்றனர் - என்றார்.

இது தொடர்பில் இராணுப்        பேச்சாளர் மேஜர் ஜெனரல்              கே. ஏ. என். ரசிககுமார தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின்              ஆலோசனைக்கமையவே இந்த வீதி திறக்கப்பட்டது.

இந்த வீதி அதியுயர் பாதுகாப்பு வலயம் ஊடாக சென்றதால் மூடப்பட்டிருந்தது.

தற்போது வீதி திறக்கப்பட்டுள்ளதே தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை.

எனவே, வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன - என்றும் கூறினார். 


அண்மைய பதிவுகள்