வடக்குக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என சஜித் கூறவில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.மரிக்கார் தெரிவிப்பு
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதனையே குறிப் பிட்டிருந்தார். மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கூறவில்லை. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். எம்.மரிக்கார் தெரிவித்தார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வடக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்கு எதிராக தெற்கில் உதய கம்மன்பில உள்ளிட்ட கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகள் வெளியிடும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே மரிக்கார் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார்.
13ஆவது அரசமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது சமூக பொலிஸ் போன்றவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் சிக்கல் இல்லை.
பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பெரும்பாலானவை மாகாண சபைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி நிறுவனங்கள் அனைத்தும் கூட மாகாண சபைகளின் கீழேயே உள்ளன. அவர் கூறியதன் அர்த்தமும் இதுவே. அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல.
அவ்வாறெனில் தற்போதுள்ளதுடன் சில விடயங்கள் இணையும். அந்தவகையில் சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
ஆனால், நான் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதனையும் கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது.
அதேபோன்று அவர்களது அடிப்படை உரிமைகளை அபிவிருத்தி செய்வதற்கான உரிமையும் இருக்கின்றது. அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்.
அனைவருக்கும் அரச உத்தியோகத்தை வழங்க முடியாது. ஆனால், தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்காமல், ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியாது.
எனவே, வடக்கு மக்களுக்கும் இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது. ஆனால், அவற்றை எமது நாட்டு அரசுகள் வழங்கவில்லை.
ஐ.தே.க. அரசோ, பொதுஜன பெரமுன அரசோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவேதான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.