இலங்கை வடக்கு - கிழக்கை கட்டியெழுப்பும் நோக்கில் சுவிஸ் வர்த்தகர்கள் சமூக ஆர்வலர்களால் சமூகக் கட்டமைப்பு உருவாக்கல்
இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள் சமூக ஆர்வலர்களால் எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம் எனும் நோக்கில் சமூகக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் சி.பிரபாகரனின் ஒருங்கமைப்பில் DAN TV முதலாளி ஞா.குகநாதன் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் சுவிஸ் நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது வடக்கு - கிழக்குப் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், சுவிஸ் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.
இலங்கையிலிருந்து சமூக ஆர்வலர் எஸ்.செல்வின் 'சூம்' தொழில் நுட்பத்தின் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகளையும், அரசியல் நிலைவரங்களையும் எடுத்துரைத்தார்.
அமைப்பின் தலைவராக இளையதம்பி சிறிதாஸ், செயலாளராக இராசமாணிக்கம் ரவிந்திரன், உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும், போசகராக ஞானசுந்தரம் குகநாதன், ஒருங்கிணைப்பாளராக சி.பிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.