பொதுவேட்பாளரை ஆதரிப்பதனால் ஐனாதிபதியாக வருபவரை நிராகரிக்கிறார்கள் - எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

6 months ago

தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரிப்பதன் ஊடாக, இலங்கைத்தீவிலே ஜனாதிபதியாக வரும் ஒருவரை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள், இலங்கைக்குள் தீர்வு இல்லை என்பதையும் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கின்றார்கள் என்ற கருத்து வெளிப்படும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசியல் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அவர்களுக்கு மக்கள் ஆணை கொடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். அதுதவறானது. சுயநிர்ணய உரிமை என்பது குடிமக்களுக்கு உரிய உரிமையாக காணப்படுகிறது. அந்த மக்கள்தான், தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

கட்சியினுடைய தலைவர்களோ கட்சியினுடைய பிரதிநிதிகளோ அதனைத் தீர்மானிப்பவர்கள் அல்ல. முதலில் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சுயநிர்ணய உரிமை, இறைமை என்று கூறிவிட்டு அதனை சமஷ்டியுடன் ஒப்பிட முடியாது. அது பகிரப்பட்ட இறைமையாகும். சுய நிர்ணய உரிமையை பகிர்வது என்ற அடிப்படையில் இந்த விடயங்களைச் சாதிக்கமுடியாது.

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் தோற்றால் மிகப்பெரிய பலவீனம் ஏற்படும் எனக் கூறுகின்றார்கள்.

இது ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு அல்ல. பொதுமக்கள் வாக்கெடுப்பு என்பது சர்வதேச சமூகத்தால் முன்னெடுக்கப்படும். பொதுவேட்பாளர் வாக்கெடுப்புத் தொடர்பாக நீங்கள் தற்பொழுது கவலைப்படத் தேவையில்லை - என்றார்.