விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு இலங்கை அரசிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், இலங்கை அரசமைப்பின் 6 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யவும் மற்றும் ஈழத் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்துடன் அரசியல் களத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்குமாறும் இலங்கை அரசிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இது தொடர்பில் உருத்திரகுமாரன் மேலும் தெரிவித்ததாவது:-
"நீங்கள் ஆயுதப் போராட்டத்தை ஒன்றல்ல. இரண்டு தடவைகள் முன்னெடுத்தீர்கள்.
இருந்தும் உங்கள் மீதான தடை நீக்கப்பட்டு சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதி அளிக்கப்படவில்லையா?
உங்களுக்கு ஒரு நியாயமும், தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு இன்னொரு நியாயமும் இருக்கும் போது இதை நாம் எப்படி இனப் பாகுபாடாக பார்க்காமல் இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியிலும் அணுகு முறையிலும் தமிழ் மக்களுக்குப் போராட வேண்டிய அவசியம் இருக்காது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
நீங்கள் கூறுவதில் உண்மை இருப்பதாக நீங்கள் நம்பினால், 6 ஆவது திருத்தச் சட் டத்தை நீக்கிவிட்டு சுதந்திரமான அரசியல் நடவடிக்கைக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்?
தமிழர் தாயகத்தில் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.
தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மற்றைய தெரிவுகளில் ஒரு சுதந்திரமான தமிழீழ நாடு என்ற விருப்பத்தையும் உள்ளடக்குங்கள்.
தேவைப்பட்டால், நீங்கள் ஒற்றையாட்சியையும் ஒரு தெரிவாகச் சேர்க்கலாம்.
தமிழ் மக்கள் ஒற்றையாட்சித் தெரிவை ஏற்றுக்கொண்டால், தமிழ் மக்கள் உங்கள் மீது உண்மையாக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை வகித்த போது. இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதற்குப் புலிகளே காரணம் எனப் புலிகள் மீது பழி சுமத்தியது.
தற்போது 15 வருடங்கள் கடந்தும், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உச்சக்கட்டத்தில் இருந்த போது இலங்கை அரசின் மீது சர்வதேச சக்திகளால் பிரயோகிக்கப்பட்ட கடுமையான அரசியல் அழுத்தங்கள் தற்போது குறைபாடடைந்து தமிழ்த் தேசியப் பிரச்சினையை முற்றாகப் புறக்கணிக்கும் அளவுக்கு மங்கிப் போய்விட்டது.
சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையால் சிங்கள அரசியல் இறுகியிருப்பதால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் வெளி இல்லாமல் போய் விட்டது என்பதே உண்மை.
அத்துடன் தீர்வு காணும் அரசியல் கலாசாரம் சிங்கள அரசியலில் இல்லை.
இதற்கான அரசியல் விருப்பமும் சிங்கள அரசியலில் இல்லை.
மகாவம்ச சிந்தனையிலிருந்து இத்தகைய கலாசாரம் மற்றும் மனப் போக்கு (தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு எதிரானது) வளர்ந்துள்ளது என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
எமது மாவீர தியாகிகளைத் தமிழ் ஈழத் தனிநாடு கோரி போராட வற்புறுத்திய இலங்கையின் அதே அரச அமைப்பு தான் இன்றுவரை தொடர்கின்றது.
வெவ்வேறு ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்தாலும் சிங்கள பௌத்த ஆதிக்க அரச கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை.
மாறாக, எந்தச் சீர்திருத்தத்தையும் அனுமதிக்க முடியாத அளவுக்கு இலங்கை அரச கட்டமைப்பு மிகவும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் நிலையும் இதுதான். நீதித்துறையின் நிலையும் இதுதான்.
பல தேசிய சமூகங்களைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு தேசம் தன் விருப்பத்தை ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் மற்ற தேசங்கள் மீது திணிக்க முடிந்தால், அது ஜனநாயகம் அல்ல மாறாக அது இனநாயகம்.
இலங்கைத் தீவில் தற்போது நிலவுவது ஜனநாயகம் அல்ல, இன நாயகமே.
2009ஆம் ஆண்டு முதல் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசமைப்பின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று கூறப்படும். இந்த விடயத்தில் உரத்த ஆரவாரங்களும் இருக்கும்.
எமது தமிழ்த் தலைவர்கள் பலர் இந்தப் புதிய அரசமைப்பு வாக்குறுதியின் பின்னால் ஓடி மக்களுக்குப் பொய்யான நம்பிக்கையை வழங்குவார்கள்.
தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் தமிழ் தேசத்தின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் அரசமைப்பில் இடம்பெறவில்லை என்பதல்ல,
மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் வெளி - அரசமைப்பில் பொறிக்கப்பட்டிருந்தாலும் - இல்லாததுதான்.
கடுமையான சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு காரணமாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் கடந்த 30 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழரின் தேசிய அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பலவீனம் காரணமாக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைப் பெற்றது.
இந்தச் சூழலில், தேசிய மக்கள் சக்தியின் "ஊழல் ஒழிப்பு" என்பது தமிழ் மக்களைக் கவர்ந்த சுருதியாக இருந்தது.
மாவீரர்களின் நினைவுகள் இருக்கும் வரை, தமிழ்த் தேசத்தை எவராலும் கபளீகரம் செய்ய முடியாது." - என்றார்.