தேசியப் பட்டியல் எம். பி. பதவியை அரியநேத்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறம் - என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பாக போட்டியிடும் நாங்கள் எமக்குக் கிடைக்கும் முதலாவது தேசியப் பட்டியல் எம். பி. பதவியை அரியநேத்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறம் - என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் சார்பில் நேற்று அவர் விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பு தம்மை ஒரு தேசியமாக திரட்டி தமிழினத்தின் இனப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்தி தமது வாக்குகளை தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கணிசமாக வழங்கியிருந்தது.
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கின்ற போதும் - பொதுவேட்பாளர் தெரிவின் போதும் பின்னரான தேர்தல் பரப்புரைகளின் போதும் அவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
அந்த வகையில் எமது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் காலத்தின் தேவை உணர்ந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழினத்தின் எதிர்காலம் கருதி செயலாற்றினார்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாக நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் எம். பி. பதவியை பா. அரியநேத்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறம் என்றுள்ளது.