தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ் தரப்புகளுக்கு அளிக்க வேண்டும். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்து.
தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை தமிழ் தரப்புகளுக்கு அளிக்க வேண்டுமே தவிர, மாறாக தென்னிலங்கை தரப்புக்கு அளிக்கக் கூடாது - என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
கடந்த 2010, 2015, 2019ஆம் ஆண்டு என மூன்று பாராளுமன்ற தேர்தல்களை நாங்கள் யுத்தத்துக்கு பின்னர் எதிர்கொண்டிருந்தோம்.
அந்த மூன்று பாராளுமன்றத் தேர்தல்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளும் கட்சிகளினுடைய ஏமாற்று வேலைகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது - அது மறுக்க முடியாது.
அந்த வகையில் இந்தமுறை வடக்கு கிழக்கில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற அலை இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
தென்னிலங்கையிலே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் வடக்கு - கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனாலும் நாங்கள் எங்களுடையவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அந்த மாற்றம் தென்னிலங்கை தரப்பை ஆதரிக்கக்கூடாது.
எங்களுடைய வடக்கு - கிழக்கு தமிழர்கள், தமிழ்த் தேசியம் என்ற ரீதியிலேயே நின்று - தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதையே கேட்டுக்கொள்கின்றோம்.
தென்னிலங்கை தரப்புகளை புறக்கணித்து இந்தத் தேர்தலிலும் எமது உரிமைகளை பறைசாற்ற வேண்டும்.
எங்களுடைய அரசியல் கட்சிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து எந்த ஒரு கட்சியும் தீர்வு திட்டத்தை முன்னகர்த்திக் கொண்டு செல்ல வில்லை என்பது மிகவும் ஒரு கவலைக்கிடமான - வெட்கப்பட வேண்டிய விடயம்.
இந்த நேரத்திலாவது தமிழ் மக்களான நாங்கள் கடந்த காலத்தில் எம்மை ஏமாற்றி அரசியல் செய்தவர்களை புறக்கணித்துவிட்டு, சரியான தலைமைத்துவத்தை பாராளுமன்றத்துக்கு அனுப்பி எமது உரிமையை பறைசாற்ற வேண்டும்.
இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை தமிழ் தரப்புகளுக்கு அளிக்க வேண்டுமே தவிர, மாறாக தென்னிலங்கை தரப்புக்கு அளிக்கக்கூடாது என்றனர்.