கருணாவை விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து ரணில் எவ்வாறு பிரித்து எடுத்தார்...?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தி, அதன் மட்டக்களப்புத் தளபதியாக இருந்த கருணாவை (விநாயகமூர்த்தி முரளிதரன்) அந்த இயக்கத்திலிருந்து பிரித்து எடுத்தது ரணில் விக்கிரமசிங்கவே என்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் - 'ரணில் தான் கருணாவைப் பிரித்தார்' என்று விடுதலப் புலிகள் என்றும் குற்றம் சாட்டியதில்லை. 'ரணில்தான் என்னைப் பிரித்தார்' என்று கருணாவும் எங்கும் சொன்னதில்லை.
"மட்டக்களப்பிலிருந்து நான் வெளியேற ரணில் உதவினார்" என்று மட்டுமே கருணா சொல்லியுள்ளார். 'புலிகளைப் பிரித்து நாட்டைக் காப்பாற்றினேன்' என்று ரணிலும் எங்கும் மார்தட்டியதில்லை.
அப்படியானால் நடந்தது என்ன...?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதியைக் கோடிக் கணக்கில் சுருட்டியமை, வரைமுறைக்கு அப்பாலான பாலியல் உறவுகளைக் கொண்டிருந்தமை, மட்டக்களப்பில் தனக்கு அடுத்த நிலைக்கு வளர்ந்து வந்த இரண்டாம் மட்டத் தளபதிகள் உட்படச் சில போராளிகளை கொலைகள் புரிந்தமை போன்றவற்றில் கருணா ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவற்றின் உச்சமாக - கருணாவின் மனைவி நீரா, கருணாவின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் தன் கைப்படப் பிரபாகரனுக்கு விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியதன் பின்னர், தன்னை வந்து சந்திக்குமாறு கருணாவுக்குத் தகவல் அனுப்பினார் தலைவர் பிரபாகரன்.
ஆனால், நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்த கருணா, பிரபாகரனிடம் செல்வதற்குப் பதிலாக, பிரதேசவாதத்தைத் தூண்டி, தனது நிர்வாகத்திற்குக் கீழ் மட்டக்களப்பில் இருந்த ஆயிரம் வரையான போராளிகளுக்கும் பொய்யுரைத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் பிரிந்தார்.
தனக்கு கீழ் இருந்த போராளிகளையும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திசைதிருப்பினார். தனக்குக் கீழ்ப்படிய மறுத்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல போராளிகளை மாவட்டத்திலேயே கைது செய்து படுகொலை செய்தார்.
இந்த நிலையில், தமது இயக்கத்தின் மட்டக்களப்பு நிர்வாகத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் எடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபடத் தொடங்கினர்.
திருகோணமலை மாவட்ட எல்லையில், வெருகல் ஆற்று கரையில், மட்டக்களப்புக்குள் நுழைவதற்காகப் புலிகளின் படையணிகள் தயாராகின.
நிகழக் கூடிய பேராபத்தின் விபரீதத்தை உணர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூகப் பெரியோர்கள் கூடி, வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைமையோடு உரையாடினர்.
மோதல் ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும், அப்பாவிப் போராளிகளின் உயிர்கள் பலியாவதைத் தடுக்குமாறும் அவர்கள் வேண்டினர்.
கருணா என்ற தனி ஒரு நபர் செய்த தவறுக்காக, அவரால் பிழையாக வழிநடத்தப்பட்டுவிட்ட பாவத்திற்காக, அப்பாவிப் போராளிகளின் உயிர்கள் பலியாகும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டினர்.
இந்த கோரிக்கையின் நியாயப்பாட்டினை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புரிந்துகொண்டு இணங்கியதன் அடிப்படையில், மட்டக்களப்பு பெரியோர்கள் சமூகத்திடம் அவர் ஒரு செய்தியைச் சொன்னார்:
“கருணாவின் பொறுப்பின் கீழ் என்னால் விடப்பட்டிருந்த அனைத்துப் போராளிகளும் என்னுடைய போராளிகள். கருணாவின் பொறுப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து ஆயுதங்களும் தமிழ் தேசத்தின் சொத்துக்கள். கருணா போகட்டும், ஆனால் அந்தப் போராளிகளையும் ஆயுதங்களையும் நான் கைவிடப்போவதில்லை.
அவலச் சாவுகளைத் தவிர்க்க ஒரே வழி, போராளிகளையும் ஆயுதங்களையும் விட்டுவிட்டு, வேறு எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, தமிழீழத்தின் எல்லைக்கு அப்பால் கருணாவைப் போய்விடச் சொல்லுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் எமது ஆளுகையை மீள உறுதிப்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கையை நாம் தொடங்கும் போது, கருணா அதனை எதிர்த்துத் தாக்கினால், எமது படைகளும் திருப்பித் தாக்கவேண்டிவரும்.
அதனால், அழிவுகளைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, கிழக்கு மாகாணத்தை விட்டு கருணா வெளியேறுவதுதான்.” - இதுவே மட்டக்களப்பு சமூகப் பெரியோர்களிடம் புலிகளின் தலைமை தெரிவித்த செய்தி.
இந்த செய்தி கருணாவிடம் தெரிவிக்கப்பட்ட பின்பு, மட்டக்களப்பில் இருந்து தான் வெளியேறுவதற்கு உதவுமாறு, அப்போது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அலிஸாஹீர் மெளலானாவிடம் உதவி கோரினார் கருணா.
அலிஸாஹீர் மெளலானா இந்த விடயத்தை அப்போது பிரதமராக இருந்தவரும் தனது கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துச்சென்றார்.
அப்போது, “விடுதலைப் புலிகளின் இந்த உள்விவகாரத்திற்குள் தலையிடாது விலகி இருக்குமாறு நான் எமது படைகளுக்கே உத்தரவிட்டுள்ளேன்.அதனால், இந்த விடயத்திலிருந்து நீங்கள் தள்ளி இருப்பது நல்லது. பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படியான ஒரு சூழலில் இந்தப் பிரச்சனைக்குள் எமது அரசாங்கம் தலையிடுவது தேவையற்ற மேலதிக சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதனை நான் விரும்பவில்லை” என்று அலிஸாஹீர் மெளலானாவிடம் தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்க.
இருந்த்போதும், ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் வன்னிக்குச் சென்ற சமூகப் பெரியோர்கள் ஊடாக விடுதலைப் புலிகளின் தலைமை வழங்கிய ஒப்புதலுடனேயே தான் மட்டக்களப்பை விட்டு வெளியேற இருப்பதாகக் கருணா தன்னிடம் தெரிவித்தமையை ரணிலிடம் விளக்கினார் அலிஸாஹீர்.
அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, “எதற்கும் விடுதலைப் புலிகளைத் தொடர்புகொண்டு, கருணா தெரிவித்த விடயங்களின் உண்மைத் தன்மையை முதலில் உறுதிப்படுத்துங்கள்.
அதன் பின்பு வேண்டுமானால் அவருக்கு உதவி செய்யுங்கள். ஏனென்றால், கருணா அரச கட்டுப்பாட்டுப பகுதிக்குள் வந்துவிட்டால், அவரையும் அவரோடு வருகின்றவர்களையும் பராமரிக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு எமது அரசாங்கம் உள்ளாகலாம்.
அதன் மூலம் விடுதலைப் புலிகளுடன் முரண்படும் ஒரு சூழலை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் இணக்கத்துடன் நீங்கள் கருணாவை கிழக்கிலிருந்து அழைத்து வந்தால், அப்போது எமக்குப் பிரச்சனை இருக்காது” என்று அலிஸாஹீர் மெளலானாவிடம் கூறினார்.
இதன் பின்பு, முதலில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புத் தளபதியாக இருந்த கேணல் ரமேஷ், பின்னர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த நியூட்டன் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்திய அலிஸாஹீர் மெளலானா, கருணா தெரிவித்த தகவலை அவர்கள் மூலம் உறுதிப்படுத்தியதுடன், கருணாவைக் கொழும்புக்கு அழைத்துச் செல்ல விடுதலைப் புலிகளின் இணக்கத்தையும் பெற்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறியத்தந்தார்.
இதற்கிடையில் - ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பிற்கிணங்க, அப்போதைய பேச்சுவார்த்தைகளின் அனுசரணையாளராகச் செயற்பட்ட நோர்வேயின் கொழும்புத் தூதரகம் ஊடாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனைத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரீஸ், கிழக்கிலிருந்து கருணாவை கொழும்புக்கு அழைத்துச் செல்ல அலிஸாஹீர் மெளலானாவுக்கு விடுதலைப் புலிகள் ஒப்புதல் அளித்தமையையும் உறுதிப்படுத்திக்கொண்டார்.
இதன் பின்பே, கருணாவை அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வருவதற்கு அலிஸாஹீர் மெளலானாவை ரணில் விக்கிரமசிங்க அனுமதித்தார்.
ஆனாலும், ஒரு நிபந்தனையுடனேயே அந்த அனுமதியையும் அவர் வழங்கினார்: கருணாவின் பாதுகாப்பிற்குத் தன்னால் பொறுப்பு நிற்க முடியாது என்றதுடன், மூன்று மாதங்களுக்கு மேல் கருணா இலங்கையில் தங்கி இருக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், அதற்குள் கருணாவை எப்படியாவது நாட்டுக்கு வெளியில் அனுப்பி விடும்படியும் கூட அலிஸாஹீர் மெளலானாவிடம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துவிட்டார்.
இதற்கிடையில் - ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவராக இந்திய அரசாங்கத்தால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவரும், விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக அப்போது பணியாற்றிவந்தவருமான லெப். கேணல் நீலன் கருணாவின் ஆட்களால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கிழக்கை விட்டு கருணா வெளியேறும் முயற்சியைச் சுமூகமாக நிறைவேற்றும் பொருட்டு, முதற்கட்டமாக, நீலனை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளால் அலிஸாஹீர் மெளலானா ஊடாக கருணாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னதாகவே, நீலனை தான் கைது செய்து வைத்திருப்பதாகவும், இந்தியாவிடம் அவரைக் கையளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், ENDLF மூலமாக இந்தியாவின் RAW அமைப்பிற்குத் தகவல் அனுப்பிவிட்டிருந்த கருணா, அதற்குப் பிரதியுபகாரமாக, விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான உதவியைக் கோரியிருந்தார்.
எனினும், நீலனை உயிரோடு இந்தியாவிற்குக் கொண்டு போய் புதிய சட்ட மற்றும் இராஜதந்திரச் சிக்கல்களை உருவாக்க விரும்பாத இந்தியா, நீலனை மட்டக்களப்பிலேயே முடித்துவிடுமாறும், மட்டக்களப்பை விட்டு வெளியேறாமல் அங்கேயே நிலைகொண்டு நின்று விடுதலைப் புலிகளை எதிர்கொள்ளுமாறும், அதற்கான அனைத்து உதவிகளையும் தாம் வழங்குவதாகவும் கருணாவுக்குத் தெரிவித்தது.
விளைவு - இந்தியாவை நம்பி, மட்டக்களப்பு பெரியோர் சமூகத்தினருக்குத் தான் வழங்கிய வாக்குறுதியை உடைத்த கருணா, அலிஸாஹீர் மெளலானாவுடன், அவரது வாகனத்திலேயே, கிழக்கிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னதாக - தனக்கு கீழிருந்த போராளிகளை விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராட வைத்து, நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டே பின்பே தப்பிச் சென்றார்.
தப்பி ஓடுவதற்கு முன்னதாக, கடுமையான சித்திரவதகள் மூலம் நீலனையும் படுகொலை செய்தார். இணங்கியபடி சுமூகமாகச் செயற்படாமல், இடைநடுவில் இந்தியாவுடன் பின்கதவுத் தொடர்புகளை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளுடன் சண்டையையும் தொடங்கி, நிலைமைகளைச் சிக்கலாக்கிய காரணத்தால் கருணாவைப் பராமரிக்க ரணில் விக்கிரமசிங்கவும் மறுத்துவிட்டார்.
இறுதியாக - நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என ரணில் இட்டிருந்த நிபந்தனைக்கு அமைவாக - தனது பேச்சை நம்பி தன்னுடன் நின்ற அனைத்துப் போராளிகளையும் நிர்க்கதியாகக் கைவிட்டுவிட்டுப் போலிக் கடவுச் சீட்டில் பிரித்தானியாவுக்கு தப்பியும் ஓடினார் கருணா.
ஆக, உண்மையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து ரணில் கருணாவைப் பிரித்து எடுத்தார் என்பது ஓர் இட்டுக்கட்டப்பட்ட கதை மட்டுமே. உண்மையில், புலிகள் இயக்கத்திலிருந்து தானாகப் பிரிந்து வந்த கருணா கொழும்பு வருவதற்கு அவர் இடமளித்தார் என்பது மட்டுமே உண்மை, அதுவும் விடுதலைப் புலிகளின் ஒப்புதலுடன்.
உண்மையில் பிரித்தானியாவிலிருந்து கருணாவைத் திரும்பக் கூட்டிவந்து, பாதுகாத்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முதன்மைத் தந்திரோபாய ஆலோசகராகப் பயன்படுத்தியது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கோட்டாபய ராஜபக்சவும், சரத் பொன்சேகாவுமே.
-கரிகாலன்-