அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுகள் நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்துக்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் கொண்ட ஜி 7 அமைப்பின் உச்சி மாநாடு இத் தாலியில் தொடங்கியது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார்.
இதன்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உக்ரைனுக்கு பல்வேறு வகையில் இராணுவ உதவி மற்றும் இராணுவப் பயிற்சியை அமெரிக்கா வழங்கும்.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைனுக்கு இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி ஜெலள்ஸ்கி தெரிவித்தார்.
அத்துடன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் தனது நாட்டுக்கு இது ஒரு பாலமாக செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
உக்ரைனின் இராணுவத்தை சிறப்பாக கட்டமைக்கவும். பயிற்சியில் ஒத்துழைக்கவும் உக்ரைனின் உள்நாட்டு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கவும் இந்த ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.