வடக்கில் மண் கொள்ளை தடுப்பது யார்?

6 months ago

எலி படத்தில கொள்ளைக்காரனான வடிவேலுவுக்கு பொலிஸ் வேலையைக் கொடுத்து ஒரு கொள்ளைக்கார கூட்டத்தையே பொலிஸ் பிடிக்கிறது. அதேபோல் மண் கொள்ளையில் ஈடுபடுபவரிடம் பொலிஸ் வேலையைக் கொடுத்தால் மண் கொள்ளையில் ஈடுபடுபவரை பிடிக்க முடியுமா? பொலிஸாரால் மண் கொள்ளையை தடுக்க முடியவில்லை.

இயற்கை மனிதனை வாழ வைக்கிறது இயற்கையை சீண்டினால் மனிதன் அழிவான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை, முதலாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். ஆனால் படித்து பொறுப்பான அதிகாரியாக அரசியல்வாதிகளாக வந்தும் பயனில்லாமல் போய்விட்டது. 

மண்ணை அள்ளு அள்ளு என அள்ளுகிறார்கள். இதனால் வரும் ஆபத்து தொடர்பில் எவருமே கண்டுகொள்கிறார்கள் இல்லை. மண் அள்ளுபவர்களை தடுக்க முயல்பவர்கள் மிரட்டப்படுகின்றார்கள். பெரிசுகள் செய்ததைப் போல் நல்லதைச் செய்ய இன்று எவருமில்லை.

மாவட்ட செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினால் பயன் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட பொறுப்பானவர்கள் மண் அள்ளுவதில் சம்பந்தப்படுகிறார்களோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஒவ்வொரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் மண் அள்ளுவது பேசு பொருளாக இருந்தாலும் நடவடிக்கை இல்லை என்பது தெரிகிறது.

மண் கொள்ளை 5 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பேசு பொருளாக இருக்கிறதே ஒழிய நடவடிக்கை இல்லை.

முல்லைத்தீவு விஸ்வமடு நெத்திலியாறு பகுதியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல விவசாயிகளின் வயல் நிலங்களில் இரவு பகலாக தொடர்ச்சியாக காணி உரிமையாளரின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்கள் மூலம் மண் அகழ்வு இடம்பெறுவதாக அந்தப் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் கனிய வளப் பிரிவினர், பொது அமைப்புகள் உட்பட எவருமே கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வயல் அறுவடை முடிந்ததும் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் இதனால் வயல் நிலம் பாதிக்கப்படுவதாகவும், சீர் செய்வதற்கு பணச் செலவு ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். வேறு எவருக்கு இது தொடர்பில் கவலை வரும். சம்பந்தப்பட்ட துறையினர் இது தொடர்பில் கண்டுகொள்வதேயில்லை. 

மணல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலால் தமது வயல் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளது.

மண் கொள்ளையில் வரும் பணத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும், தேர்தல் செலவிற்கென பண வசூலில் கிளிநொச்சியில் அரச திணைக்களமும், பொலிஸாரும் நேரடியாக களத்தில் குதித்துள்ளதாக பத்திரிகை செய்திகள் அண்மையில் வெளிவந்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக்கல்லாறு மற்றும் குடமூட்டி பகுதிகளில் இந்த மணல் கொள்ள இடம்பெறுகிறது. பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய வனவள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சகிதம் மணல் வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கவயன் குடியிருப்புப் பகுதியில் அடாத்தாகப் பிடித்த காணியில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்ததால் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டது. 160 ஏக்கர் பனை மரங்களைக் கொண்ட இந்தக் காணி சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு முள்ளுக்கம்பி போடப்பட்டு காணி அடைக்கப்பட்டது. 

குறித்த காணி இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இப்படியாக இயற்கை வளங்களை சுரண்டல் செய்யும் அரசும் ,அமைச்சும் சம்பந்தப்பட்ட துறையினரும் இருக்கும் மட்டும் எவராலும் தடுக்க முடியாது.

அண்மைய பதிவுகள்