இலங்கையின் வடக்குக் கிழக்கை பொருளாதாரத்தில் கட்டி எழுப்பும் நோக்கில் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களால் சமூகக் கட்டமைப்பு உருவாக்கம்
இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்பும் நோக்கில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம் எனும் நோக்கில் சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
சமூக செயற்பாட்டாளர் சி.பிரபாகரனின் ஒருங்கமைப்பில் சூரிச் மாநிலத்தில் கில்டன் கார்டன் இன்னில் (hilton Garden Inn) மூத்த ஊடகவியலாளர் ஞா.குகநாதன் தலைமையில் நடைபெற்ற அங்குராப்பண நிகழ்வில் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களும், சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், வடக்குக் கிழக்குப் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், சுவிஸ் அரசின் அங்கிகாரம் பெறல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.
இலங்கையிலிருந்து சமூக ஆர்வலர் எஸ். செல்வின், 'சூம்' ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலமைகளையும், அரசியல் நிலவரங்களையும், எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடரபிலும் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் பல்வேறு கலந்துரையாடல்களின் பின் அமைப்பு ஒன்றை உருவாக்குவது எனவும் கட்டமைப்புக்கான பெயரை காலப் போக்கில் தீர்மானிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுடன் யாப்பை உருவாக்குவதுடன் கட்டமைப்புக்குள் இளையோர்களையும் உள்வாங்கி அவர்களுக்குப் பொருத்தமான பொறுப்புக்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கபட்டது.
அமைப்பின் தலைவராக இளையதம்பி சிறிதாஸ், செயலாளராக இராசமாணிக்கம் ரவிந்திரன், உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்களும், போசகராக ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதனும், ஒருங்கிணைப்பாளராக சி.பிரபாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.