'கிளீன் சிறிலங்கா' திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நியமித்த செயலணியில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் புறக்கணிப்பு
'கிளீன் சிறிலங்கா' திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
18 பேர் கொண்ட இந்த செயலணியில் ஒரு சிறுபான்மை பிரதிநிதியைகூட உள்ளடக்க முடியாதா என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
'கிளீன் சிறிலங்கா' திட்டம் என்பது வெறுமனே நாட்டை சுத்தமாக்கும் திட்டம் மாத்திரமல்ல என்றும் அது ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களின் மனநிலை, அவர்களது கருத்துகள் மற்றும் எண்ணங்களை மாற்றும் திட்டமென ஜனா திபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் கூறியிருந்தார்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் பட்சத்தில் இங்கு அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பங்களிப்பு அவசியம் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.