தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக வெற்றி பெற்றதால், கொடிய சட்டத்தைக் கொண்டுவர இலங்கை ஜனாதிபதி முற்படுவார்." வைகோ தெரிவிப்பு

1 month ago




"தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை ஜனாதிபதி திஸநாயக்க முற்படுவார்."இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த போதே வைகோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

"மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்ஷ அரசு காரணம் என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜே.வி.பி. கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வந்தவர்தான் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க.

அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி, ஜே.வி.பியினுடைய மறு பதிப்பாகும்.

தொடக்கத்திலிருந்தே தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற கொலைவெறி நோக்கம் கொண்டவர்தான் திஸநாயக்க.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில், அவரது கட்சி கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழர்கள் ஏமாந்து விட்டார்கள். 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டபோது, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்றும், 13 ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்கக் கூடாது என்றும் சிங்கள இனவெறியினுடைய கருத்தாக தொடர்ந்து கூறிவந்தவர் திஸநாயக்க.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவரும் அவர்தான்.

சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கியபோது. தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூச்சலிட்டவர்தான் திஸநாயக்க.

இந்திய அரசு தொடர்ந்து சிங்கள அரசையே ஆதரித்து வந்திருக்கின்ற நிலையை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும். சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். சிறையில் அடைபட்டுள்ள தமிழர்கள் விடுவிக் கப்பட வேண்டும். தமிழினப் படுகொலையை நடத்திய சிங்கள அரசு மீது அனைத்துலக நாடுகளின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் தமிழர்களுக்கு எதிராக கொடும் குற்றங்களை செய்திருந்தாலும், அவர்களைவிட சிங்கள வெறிபிடித்தவர்தான் இன்றைய ஜனாதிபதி.

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர அவர் முற்படுவார்.

சிங்கள அரசோடு மிகுந்த அக்கறையோடு உறவு கொண்டுள்ள இந்திய மோடி அரசு, இனிமேலாவது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது.

ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களை நாசமாக்கி, அவர்களது உயிர்களையும் பறித்த சிங்கள அரசு சர்வதேச நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்படுகிற வரை, சுயநிர்ணய உரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகுவாழ் தமிழர்களும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கும், பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் அழுத்தம் தர வேண்டும்.

தமிழர்கள் சிந்திய ரத்தத்தையும், உயிர்ப்பலியையும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தீக்குளித்து உயிர்களையும் தந்த தியாகத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழீழத்தில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகள்  ஆக்கப்பட்டனர்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் இந்திய அரசும், ஏனைய நாடுகளின் அரசுகளும் ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும் துரோகம் செய்வது ஏன்?

தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலகுவாழ் புலம்பெயர் தமிழர்களும் நம் இனத்தைக் காப்பாற்ற ஒன்றுபட்டு உலக அரங்கில் குரல் எழுப்ப வேண்டும்.

இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது. ஈழத்தமிழர் பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் தமிழீழத்தை ஆதரிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்