இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக மீனவர்கள் பாம்பன் பாலத்தில் வீதி மறியல் போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து நேற்று பாம்பன் பாலத்தில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 66 படகுகளுடன் 497 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய் யப்பட்டு நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இதில் 90 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர் என தமிழக மீனவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு 16 இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதும், இராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நவம்பர் 12 ஆம் திகதி பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இந்த போராட்ட அறிவிப்புக்கு நாட்டுப் படகு மீனவ அமைப்புகளும் ஆதரவு அளித்தன.
முன்னதாக திங்கள்கிழமை இராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய அமைதிக்குழு கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், மீனவர்கள் அறிவித்த படியே நேற்று காலை 9.30 மணியளவில் பாம்பன் சாலைப் பாலம் துவங்கும் இடத்தில் மறியல் போராட்டம் ஆரம்பமானது.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் இராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
போராட்டம் துவங்கிய போது மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டது.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
பாம்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 500 மீனவர்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.