வடக்கில் மரங்களை அழித்ததால் காலநிலையில் மாற்றம்.

இயற்கையை பாதுகாக்க முடியாத எந்த அரச திணைக்களமும் இருந்து பயனில்லை. நீரையும், கல்லையும், மரங்களையும் கடவுள் போல வழிபட்ட காலத்தில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டன.

காலநிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்று இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதால் காலநிலையில் மாற்றங்கள். பாதிப்புகளை எதிர்கொள்ளும் மக்கள்.

மரங்களின் முக்கியத்துவம் பெரிசுக்கு தெரியும். அதனால் தான் வன்னியில் மரங்களை பாதுகாத்தனர். கண்டபடி மரங்களை வெட்ட முடியாது

இன்று வன்னிக் காட்டில் கண்டபடி மரங்கள் வெட்டப்படுகின்றன. வனவள திணைக்களங்கள் இருந்து என்ன பயன்.


வன்னி வான்பரப்பின் ஊடாக விமானம் மூலம் ஒரு தடவை பயணம் செய்த போது, காட்டின் நடுப்பகுதி வெட்ட வெளியாக காணப்பட்டதாக வடமாகாண முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஒரு நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அந்தப் பகுதியில் இருந்த மரங்கள் தறிக்கப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு சென்றனர். முல்லைத்தீவில் மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்வதை செய்தி அறிக்கையிடச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட திணைக்களமே இதற்கு காரணமாக இருக்கின்றமை கவலை தரும் விடயமாகும்.

யாழ். மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களில் அழிக்கப்பட்ட மரங்களின் விபரம் தொடர்பில் தகவல் அறியும் சட்ட மூலத்தைப் பயன்படுத்தி மாவட்ட செயலகத்தில் கேட்கப்பட்ட தகவலுக்கு விபரம் இல்லை என பதில் வந்தது.

மாவட்ட செயலகத்தில் அனர்த்தப் பிரிவு ஒன்று செயற்படுகிறது, அவர்கள் மரங்கள் தறிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கவனம் செலுத்தாது விட்டதால் ஆயிரக் கணக்கில் மரங்கள் தறிக்கப்பட்டு விட்டன.

காப்பெட் வீதி புனரமைப்பின் போது வீதி அருகில் நின்ற மரங்கள் அனைத்தும் தறிக்கப்பட்டன. மரங்களை தறிக்காமல் வீதிகளைப் போட்ட நாடுகளைப் பாருங்கள்.

கச்சேரி நல்லூர் வீதியின் அருகில் எத்தனை மரங்கள் இருந்தன. பல மரங்கள் தறிக்கப்பட்டன, மரங்கள் தறிப்பதற்கான காரணங்களைத் வைத்திருக்கிறார்களே ஒழிய, அந்த மரங்களை தறிக்காமல் பாதுகாக்கக் கூடிய முறைகள் பற்றி தெரியாமல் இருக்கின்றனர்.

கச்சேரி நல்லூர் வீதி ஊடாக செல்லும் போது மர நிழல் பரவி குளிர்மையாக இருக்கும். இன்று அது இல்லை. அருகில் நின்ற மரங்கள் தறிக்கப்பட்ட போது அந்தப் பிரதேசத்தில் இருந்த பிரதேச செயலகம், மாநகர சபை, மாவட்ட செயலகம் உட்பட அனைத்தாலும் தடுக்க முடியாமல் போனது.

பருத்தித்துறை வீதியில் செல்லும் போது வெயிலில் ஒதுங்குவம் என்றால் ஒரு மரம் இருக்கின்றதா என்று பாருங்கள். வீதி புனரமைப்பு செய்தவர்கள் மரங்களை அழிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது. இயற்கை வளங்களை அழிப்பவர்கள் தண்டனைக்குரியவர்கள்.

மாவட்ட செயலகத்துக்கு முன்னே உள்ள ஓல்ட் பார்க்கில் இருந்த மரங்கள் எங்கே?, அந்த மரங்களில் தங்கி வாழும் பறவைகள் எங்கே? கட்டடங்களை கட்டுவதற்காக அழித்தனர். பொறுப்புள்ள துறையே அழிக்கும் போது யார் கேள்வி கேட்பார்கள்.

விளைவு ஒன்று இடம்பெற முதல் அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எவருக்குமே தெரியாது. விளைவு ஏற்பட்ட பின்னர் வருந்தி என்ன பயன். சென்ஜோன்ஸ் பாடசாலைக்கு முன்னால் ஒரு மரத்தை தறித்துவிட்டார்கள் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசப்பட்டது. இந்த விடயங்கள் அப்பவே பேசப்பட்டிருந்தால் பல மரங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னால் இருந்து ஒருவர் எழும்பி தமது பிரச்சினையை சொன்னால், கேட்கவில்லை சத்தமாகச் சொல்லுங்கள் என்று அவரின் பிரச்சினையை காதில் எடுக்காமல் விடுவது மட்டுமல்ல, அந்தப் பிரச்சினை தொடர்பில் நக்கல் விட்டு சிரிக்கும் அரச அதிகாரிகள் இருக்கும் மட்டும் எதனையும் வழிப்படுத்த முடியாது.

அடிக்கிற வெயில் அணலில தான் இயற்கை வளங்கள் பற்றி சிந்திக்கிறோம்.

இனியாவது இருக்கிற மரங்களை பாதுகாக்கவும், இயற்கை வளங்கள் தொடர்பில் அனைத்து அரச திணைக்களங்களும் அக்கறை கொள்ள வேண்டும்.

போர்க்காலங்களில் பனை தென்னைகளின் தலைகள் விழுந்தாலும் மரங்கள் எழும்பி நின்றன.