யாரில் வயோதிபர்கள் காணாமற் போவதற்கு விசாரணை வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வலியுறுத்து

6 months ago

யாழ். மாவட்டத்தில் வயோதிபர்கள் மிகவும் மர்மமான முறையில் காணாமற்போகும் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:- 

யாழ்.மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வயோதிபர்கள், பிரபல வர்த்தகர்களும் காரணங்களற்று திடீரெனக் காணாமற்போகும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த ஏழு வருடங்களாக நடைபெறும் சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இத்தகைய சம்பவங்கள் வயது மூப்பினால் தன்னிச்சையாக இடம்பெறுபவை என அடையாளப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் பின்னணி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான வேலுபிள்ளை நடராசா (வயது -63) கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், மாதாந்த மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளார்.

இவரின் மகன் ஒருவர் ஊடகவியலாளராகக் கடமையாற்றுகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு, பத்திரிகை விளம்பரம், சமூகவலைத்தளங்கள் மூலமான பதிவுகள் என ஏழு வருடங்களாகத் தேடுதல் நடந்தும் எந்த முடிவும் கிட்டவில்லை.

அதேபோல யாழ். புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி யோகம்பா சோபிநாதன் (வயது -63) என்பவர் ஆறுமாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளார்.

இவர் எங்கே என்பது இதுவரை தெரியாது.

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரும், வர்த்தகத்துறை சார்ந்து இலங்கை அரசால் தேசமான்ய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவரும், புங்குடுதீவு மக்களால் அதிகம் அறியப்பட்டவருமான வைத்திலிங்கம் கனகலிங்கம் (வயது -82) 2024 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி மதியவேளை, அவரின் வீட்டின் முன்பாக இருந்தவேளை திடீரெனக் காணாமற் போயுள்ளார்.

பிறிதொருவரின் உதவியற்று நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் ஏறிச்செல்லவோ முடியாத நிலையில் இருந்த அவர், திடீரென வீட்டு வாசலில் இருந்தே காணாமற்போயுள்ளமை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

இதுவரை அவர் தொடர்பில் எவ்விதத் தகவல்களும் இல்லை.

இவ்வாறு வயோதிபர்கள் காணாமற்போதல், இளைஞர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுதல், கைதுகள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் என்பன இங்கு நடக்கின்றன.

இந்த நாட்டில் நீதி, சிவில் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

யாழ்.மண்ணில் இந்த மூன்று வயோதிபர்களுக்கு மேலதிகமாக இன்னும் பலர் காணாமற் போயிருக்கக்கூடும். இவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை என்றார்.