நீதிமன்ற வழக்கை முடிவுறுத்த தமிரசுக் கட்சி தீர்மானம்

திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

திருகோணமலை நீதிமன்றில் உள்ள கட்சி தொடர்பான வழக்கில் வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

கட்சியின் நிலைப்பாடுகளை நிலைநிறுத்தி யாப்பினுடைய அடிப்படை விடயங்களை முன்னிறுத்தி எவ்வாறு செயலாற்றியிருக்கின்றோமோ அதனடிப்படையில் தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்குமான தெரிவுகளையும் மீள நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றோம்.

உரிய வகையில் நிர்வாகத் தெரிவு நடத்தப்படாத தொகுதிக்கிளைகள், மூலக்கிளைகள் தொடர்பாக கட்சியின் மத்திய குழு கலந்தாலோசித்து அவற்றின் நிர்வாகத்தை புதிதாகத் தெரிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவரை, மாவை. சேனாதிராசாவே கட்சியின் தலைமைப் பதவியில் இருப்பார்.

முதலில் வழக்கை கைவாங்கி கட்சியை எமது வீட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்திருக்கின்றோம் - என்றார்.

வழக்காளிகள் சட்டத்தரணிகளுடன் சுமுகத் தீர்வுக்கு இணக்கப்பேச்சு நடத்துவதற்கு மத்திய குழு உறுப்பினர்களும் இந்த சட்டத்தரணிகளுமான எம்.ஏ.சுமந்திரன், கே.வி.தவராசா ஆகிய இருவரையும் இதனை கையாளுமாறு மத்திய குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை நீதிமன்றத்தில், வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்குவதாக பிரதிவாதிகளான சிறீதரன் உள்ளிட்ட சிலர் தெரிவித்திருந்த நிலையில், அந்த முடிவு தவறானது என கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பதும், நேற்றைய கூட்டத்தில் ஏனைய உறுப்பினர்களின் முடிவுக்கே சுமந்திரனும் இணங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்