தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு சிவில் சமூகம் எதிர்ப்பு - கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றையும் கையளித்துள்ளனர்
தேர்தல்களை பிற்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளதை தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சிவில்சமூக பிரதிநிதிகள் பாலித ரங்க பண்டாரவின் கருத்தினை ஜனநாயக விரோத கருத்து என குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பு தேசிய சிவில் அமைப்புகளின் முன்னணி மின்சார பாவனையாளர்கள் சங்கம் உட்பட பல அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திடம் கையளித்துள்ளனர்.
மே 28 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கை மக்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் இதன் காரணமாக சமூகத்தில் மிகவும் முரணாண நிலை தோன்றியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல்களிற்காக காத்திருக்கும் மக்களிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ள விடயம் மிகவும் பாரதூரமானது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாலித ரங்க பண்டாரவின் இந்த அறிவிப்பிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ளன.
இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் தேர்தல் ஆணையாளரை அமெரிக்க தூதுவர் சந்தித்துள்ளமை மிக முக்கியமானது இலங்கையின் ஜனநாயகம் குறித்து நம்பகதன்மைமிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பொதுமக்கள் கருதுகின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.நாவும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் மன்னிப்பு கோரவேண்டும் என வேண்டுகோள் விடுக்க வேண்டும் ஜனநாயகம் தொடர்பில் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தடுப்பதற்காக தலையீடு செய்யவேண்டும் எனவும் தங்கள் கடிதத்தில் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.