முள்ளிவாய்க்காலில் மக்கள் காத்திருக்கின்றனர் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவிப்பு
'இலங்கையில் போர் 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர்' இவ்வாறு சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய அவர் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதம் தாங்கிய உள்ளகப் போரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தவறிய இலங்கை அதிகாரத் தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் இணைந்த கவனயீனமான செயற்பாட்டை இன்றைய வருடப் பூர்த்தி நினைவூட்டுகின்றது.
15 வருடங்களுக்கு முன்னர் போரின் இறுதி நாள்களில் பெருமளவான அப்பாவிப் பொதுமக்கள் உயிர்நீத்த பகுதியில் இன்று நாம் மிகவும் துயரத்துடன் நிற்கின்றோம்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக, போரின்போது தாம் இழந்தவர்களை நினைவுகூருவதற்காக தமிழ்ச் சமூகம் முன்னெடுத்திருந்த முயற்சிகளைத் தடுக்கும் வகையில் கைதுகள், பலவந்தமாக தடுத்து வைப்புகள் மற்றும் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பியிருந்தமை போன்ற நினைவுகூரலைத் தடுக்கும் வகையிலான சம்பவங்களை நாம் அவதானித்திருந்தோம்.
உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், தமது அன்புக்குரியவர்களுக்காகஅமைதியான முறையில் ஒன்றுகூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைக்கு அதிகாரத் தரப்பினர் மதிப்பளிக்கவேண்டும்.
போரில் இரு தரப்புகளிலிருந்தும் சர்வதேச சட்டங்களுக்கமையவும், சர்வதேச மனிதஉரிமைகள் மற்றும் மனிதநேயச் சட்டங்களை மீறும் வகையிலான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் காணப் படுகின்றமையை ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் இனங்கண் டுள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற அல்லது சுயாதீனமான தேசிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள், தமது அன்புக்குரியவர்களைத் தொடர்ந்தும் தேடியவண்ணமுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை நீண்ட காலமாகத் தேடுவதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சிறந்த தீர்வாக அமைந்திருந்த போதும், கடந்த 15 வருட காலப் பகுதியில் பொறுப்புக்கூறலுக்காக உள்ளகக் கட்டமைப்பை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் வெறும் கண் துடைப்புகளாகவே அமைந்திருந்தன.
இந்த வாரத்தின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, இந்த விடயம் தொடர்பான கறைகள் மாறாமல் காணப்படுகின்றன.
உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்காக இன்றும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர்.
இன்று முள்ளிவாய்க்காலில் நாம் அவர்களுடன் உறுதியாக கைகோர்த்துள்ளோம் என்றார்.