மன்னாரில் மக்களின் காணிகளை அனுமதியின்றி அபகரித்து கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

2 months ago




மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடைமுறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (06) காலை குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றது.

அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைதொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து          நடைமுறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்காக மன்னார் மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் பெருந் தொகையான வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்தன.

குறித்த விடயத்திற்காக அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள், பொது அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கான மக்களை ஒன்று திரண்டு வருகை தந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாது பாதையை தடுத்ததுடன் அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.

அத்துடன் இச் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் அதிகாரிகள் பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது.

தொடர்ந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிடுவதற்கு உட்செல்ல முயன்ற நிலையில் மக்கள் திரண்டு இதற்கான எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலை இப் பிரதேசம் எதிர் கொண்டு வரும் பாதிப்புகளை தெளிவாக வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை செல்ல விடாது பாதையை மறித்து அவர்களை திருப்பி செல்ல கோரிய நிலையில் கள விஜயம் தற்காலிகமாக நிறுத்தி அரச பணிக்கு இடையூறு விளைவித்தமைக்காக நீதிமன்றத்தை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் குறித்த பகுதியிலே நீதிமன்ற நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை பிரதமர் ஹரினி தலைமையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் அரசாங்க மீள் ஆய்வு செய்ய உள்ளது என தெரிவித்திருந்த நிலையில் அவர் கருத்து தெரித்து இரண்டு நாட்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை கவலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


அண்மைய பதிவுகள்