தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது.
இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அந்த கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்ற மையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக்கழக செயற் குழு கவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு விஜயம் மேற் கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதில் மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுவதற் கும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் இலங்கை ஜனாதிபதி தமது முதல் பயணத்தின் போதே ஒப்புக்கொண்டுள்ளார்.
இது மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்த ஆரம்பம் என குறித்த செயற்குழு கருதுவதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
அத்துடன் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குக் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.