மருத்துவர் அர்ச்சுனாவுக்கான பிணை மனு நிராகரிப்பு.

5 months ago


மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குழப்பம் ஏற்படுத்தியதான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை மனு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்து குழப்பம் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி இன்று சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஒரு நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.

இதன்போது சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தனது சமர்ப்பணத்தில் வைத்தியர் அர்ச்சுனா ஒரு சிறுநீரக நோயாளி என்ற அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது வைத்தியசாலை சார்பில் 22 சட்டத்தரணிகள் சட்டத்தரணி டெனீஸ்வரன் தலைமையில் ஆஜராகி வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை வழங்குவதைக் கடுமையாக ஆட்சே பித்தனர். இதனையடுத்துப் பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

மருத்துவ தவறால் பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறுவதும் இதே வைத்தியசாலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.