வடக்கில் காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரின் மாதிரிகளில் எலிக் காய்ச்சல் அல்லது லெப்டோஸ் பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக் காய்ச்சல் அல்லது லெப்டோஸ் பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிலர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக் காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனைய ஆய்வுப் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் குழாமொன்று நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.
வடக்கு மாகாணத்தில் காய்ச்சல் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள நிலைமைகளை ஆராயும் நோக்கில் இந்த வைத்திய நிபுணர்கள் குழாம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைக் குறித்த வைத்தியர்கள் குழாம், பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.