வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜி. ஜி. பி. திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து.
வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜி. ஜி. பி. திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேயகி, சார்ப் திட்ட பணிப்பாளர் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய மற்றும் டாஸ் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோருடன் இணைந்து கைச்சாத்திட்டார்.
வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை விரிவுபடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களுக்காக மொத்தம் 1,007,194 அமெரிக்க டொலர்களை (சுமார் 300 மில்லியன் ரூபாய்) வழங்கியுள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற் றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு பிரதான நன்கொடையாளராக உள்ளதுடன், மொத்த உதவித் தொகை 46 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
சார்ப் மற்றும் டாஸின் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 6,304 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியானது இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் முன்னணி நன்கொடையாளராக ஜப்பான் அர சாங்கம் தனது பங்களிப்பை ஆற்றி வருவதாகவும், கண்ணிவெடி பாதிப்பு இல்லாத இலங்கையை அடைவதற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.