யாழில் முகத்தை மறைத்தவாறு பகலில் வாள்களுடன் மர்மநபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு - பொலிஸாரும் படையினரும் என்ன செய்கின்றனர் என்று எம்.பி சிறீதரன் கேள்வி
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் இனந்தெரியாத நபர்கள் நடமாட முடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள், பொலிஸார், இராணுவம், கடற் படை மற்றும் விமானப்படையின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் இனந்தெரியாத நபர்கள் நடமாடியமை தொடர்பாக நாளை சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் அவதானிக்கப்படமை தொடர்பாக ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் இனந்தெரியாத வகையில் முகத்தையும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டையும் கறுப்புத் துணிகளால் மறைத்து வாள்களைச் சுழற்றியவாறு வீதியால் செல்வது எனது வீட்டு கண்காணிப்பு கமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச் செயல்களுக்குப் பின்னால் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார். உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது மிகத் துலாம்பரமாக வெளிப்படுத்துகின்றது.
போர்க் காலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் ஃ பீல்ட் பைக்கில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு வந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுப்ட்டனர்.
அதே பாணியில் உள்ளுார் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி ஏன் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு செய்யக்கூடாது என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களைக் கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்காமலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.
இதற்குப் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பது மிகத் துலாம்பரமாகத் தெரிகின்றது.
யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சூழலில் இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை சபாநாயகருக்கு எழுத்துமூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.
இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசு தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும் என்றார்.