கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் அபிவிருத்தியை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பானின் ஜெய்க்கா இணங்கியுள்ளது.
சலுகைக் கடனுதவியின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தனது அமைச்சு வளாகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த உடன்படிக்கை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று காலை அமைச்சில் இடம்பெற்றதுடன், இந்த நிர்மாணப் பணிகளுக்காக 170 பில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட உள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணி கடந்த 2020ஆம் ஆண்டு ஜெய்க்கா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அப்போது ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு குறித்த திட்டம் நிறுத்தப்பட்டது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமையால் (ஜெய்க்கா) நிதியளிக்கப்பட்ட இந்த திட் டம் 2022 இல் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு இறுதி செய்யப்படும் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.