இலங்கை ஜனாதிபதியின் வரவு செலவு திட்டம் ரணிலின் திட்டத்திலே அமைய வேண்டும் இல்லை எனில் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும். வஜிர அபேவர்தன தெரிவிப்பு

18 hours ago



தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்ட தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே முன்வைக்கப்பட வேண்டும்.

அதற்கு அப்பால் சென்று வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்தால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலியில் உலுவிட்டிகேவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

மூன்று மாத தாமதத்தின் பின்னரே அதனை முன்வைக்கப் போகின்றனர்.

இந்தத் தாமதத்தால் ஏற்படக்கூடிய நட்டத்தை தவிர்த்துக் கொள்வது இலகுவான விடயம் அல்ல.

அத்துடன் அரசாங்கம் நினைத்தவாறு வரவு- செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார்.

முக்கியமான 92 சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தே அவர் அதனைச் செய்தார்.

அந்த சட்டங்களுக்கு அமையவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இதனை தவிர வேறு முறைகள் கிடையாது.

ஏதேனும் முறையில் இந்தச் சட்டங்களுக்கு புறம்பாக வரவு - செலவுத் திட்டங்களை முன்வைத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்த நாடாகும் என்பதனை உறுதியாக கூற முடியும் - என்றார்.