இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் மேலதிக சாதகத் தனங்களுடன் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் மாவைக்கு தெரியப்படுத்தியுள்ளாராம்.

5 months ago


யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாவை சேனாதிராஜாவை நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியதுடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாவைக்கும் ரணிலுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆவணத்தை மாவையிடம் ரணில் கையளித்துள்ளார்.

அந்த ஆவணத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என்று ரணில் மாவையிடம் தெரிவித்துள்ளார். இதன்போது, '2005ஆம் ஆண்டில் சமஷ்டி அடிப்படையிலான தர்வுத் திட்டத்தை தருவதற்கு நீங்கள் இணங்கியிருந்தீர்கள். ஆனால், அன்றைய காலச் சூழ்நிலையில் அந்தத் தீர்வுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சமஷ்டியையே தர முன்வந்தவர்கள் என்ற அடிப்படையில், அது போன்ற தீர்வுத்திட்டத்தை ஏன் நீங்கள் மீண்டும் முன்வைக்கக்கூடாது' என்று மாவை கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், 13ஆவது திருத்தத்தை தமிழர்கள் தமது பிரச்சினைக்கான தீர்வாகக் கொள் ளவில்லை என்றும் மாவை ரணிலிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் மேலதிக சாதகத் தனங்களுடன் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் தெரியப்படுத்தியுள்ளார். இதற்குப் பதில் வழங்கிய மாவை, தமிழரசின் மத்திய குழுக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அதில் தங்களின் ஆவணமும் கோரிக்கை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டு பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.