வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது -- எம்.பி இ.அர்ச்சுனா கடுமையாகச் சாடினார்

"வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் பிச்சை எடுப்பதற்குத் தயாராக இல்லை என்பதனை உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியைக் கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம்.
தலதா மாளிகைக்குக் குண்டு வைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல. ஆனால், எமது தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதி என்பீர்கள். ஏனெனில் நாங்கள் தமிழர்கள்."-இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடுமையாகச் சாடினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
"வரவு-செலவுத் திட்டத்தில் வடக்குக்கு ஏதோ பெரிதாக ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றீர்கள்.
யாழ் நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு - செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.0076வீதமாகும்.
பிச்சை போடுவது போன்று யாழ், நூலகத்துக்கு ஒதுக்கியுள்ளீர்கள்.
பரவாயில்லை அடுத்ததைப் பார்ப்போம்.
வடக்கு வீதிகள் அபிவிருத்திக்கென 5000 மில்லியன் ரூபாவையோ, ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு - செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.38 வீதம். இதுவும் ஒரு பிச்சை.
தமிழனுக்கு நீங்கள் போட்ட பிச்சை. அதையும் விடுவோம்.
வடக்கு, கிழக்கில் 35 ஆண்டுகள் பெரும் போர் இடம்பெற்றது. இந்தப் போரில் நான் உட்பட எனது உறவுகள் வீடுகளை இழந்தனர். ஆனால், வடக்கு, கிழக்கில் வீடுகளைப் புனரமைக்க 1500 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இது வரவு - செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட் டில் 0.01வீதம். எமது வீடுகளை இடித்து எமது காணிகளைப் பிடித்து எங்களில் 45000 பேரைக் கொலை செய்துவிட்டு நீங்கள் எங்களுக்குப் போடும் பிச்சை இது.
இன்னொரு விடயத்தையும் கூறுகின்றேன். வட்டுவாகல் பாலம் அமைக்க 1000 மில்லியன் ரூபா தந்துள்ளதாகக் கதைக்கின்றார்கள். இது வரவு - செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.076 வீதமாகும். இந்தப் பிச்சைக்கும் நன்றி.
அத்துடன் சுகாதாரத்துறையிலாவது எங்களுக்கு ஏதாவது பிச்சை போட்டுள்ளீர்களா என்று பார்த்தால் மொத்தமாக 382 பில்லியன் ரூபா ஒதுக்கிவிட்டு வடக்குக்கு நீங்கள் தந்திருப்பது 0.66 வீதமாகும்.
உங்கள் பிச்சை எந்தளவுக்கு உள்ளது என்பதனை இதில் பார்த்துக்கொள்ளுங்கள்.
கிழக்குக்கு நீங்கள் போட்டுள்ள பிச்சை 0.8.வீதமேயாகும்.
தமிழர்கள் பிச்சை எடுப்பதற்குத் தயராக இல்லை என்பதனை உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
எனது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். முடிந்தால் நீங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் உங்களுக்கு பில்லியன், ரில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு வருகின்றோம்.
நாங்கள் உங்களுக்குப் பிச்சை போடுகின்றோம்.
சீனாவிடமும் இந்தியாவிடமும் நீங்கள் பிச்சை எடுத்து விட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுவீர்கள்.
ஜனாதிபதி வந்து நாங்கள் வடக்குக்குப் பெரும் நிதி ஒதுக்கியுள்ளோம் என்று கூறுவாராம். இது பிச்சையிலும் பிச்சை.
எடுப்பானாம் ஆண்டி பிச்சை. அதற்குப் பிறகு போடுவானாம் ஒரு பிச்சை. இது ஒரு கேவலமான செயல் என்றே குறிப்பிடுகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இண்டஸ்ரியல் பார்க் நிர்மாணிக்க போகின்றார்களாம். 3 இடங்களிலாம். அதில் 300 இருக்கின்றதாம்.
கைத்தொழில்துறைக்கு நீங்கள் மொத்தமாக ஒதுக்கிய மொத்த செலவீனத்தில் 1.54 வீதம். கே.கே.எஸ்.ஸை நாங்கள் கட்டுவோம்.
தமிழன் கட்டுகின்றான் கே.கே.எஸ்.ஸை. முடிந்தால் கே.கே.எஸ்.ஸை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களுக்குச் சீமெந்து தருகின்றோம்.
வடக்கு, கிழக்கிலிருந்து நான் உங்களுக்கு எல்லாம் தந்தோம். ஆனால், நீங்கள் எமது உதிரங்களை எடுத்துவிட்டு இப்போது 0.00 அளவில் பிச்சை போடுகின்றீர்கள்.
இந்தப் பிச்சைதான் உங்களின் பட்ஜட் அதற்காகத்தான் நாம் வாக்களித்தோம்.
எனது தமிழ் மண் பிழையாகப் போட்ட 3 பேருக்கான வாக்குகளினால் பத்திரிகை வாசிக்கத் தெரியாதவர்கள் வந்துள்ளார்கள்.
ஏனெனில் 13 இல் அநுரகுமார திஸாநாயக்க எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று எமது மக்கள் வைத்த நம்பிக்கை கொண்டார்கள்.
நான் சிங்களர்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், இங்கு என்னை எதிரியாகவே பார்த்தார்கள். ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிக்குமான சண்டையில் நாங்கள்தான் அவதிப்படுகின்றோம்.
யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் அரச வாகனத்தைக் கொண்டுபோய் மோதி உடைத்துள்ளார். இந்நிலையில், அரச அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் 56 மில்லியன் ரூபாவில் 35 மில்லியன் ரூபாவை எடுக்கப்போகின்றாராம்.
அப்படியானால் நாங்கள் என்ன தேங்காய்களா? அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார். ஆனால், நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை, இருந்தால் பட்டியல் தாருங்கள் என்று கேட்கின்றார். இது கேவலம், கேவலம்,
எமது தீவகத்தில் குடிப்பதற்கு நீரின்றி எமது சமூகம் இறந்து கொண்டிருக்கின்றது.
ஆனால், தெற்குக்கு 61234 மில்லியனை நீர் வழங்கலுக்கு ஒதுக்கியுள்ளீர்கள். அதனை விட மேலதிகமாகவும் 20000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால், வடக்குக்குத் தண்ணீர் இல்லை. உங்களுக்கு எமது மக்களின் வலிகள் தெரியாது.
தலதா மாளிகைக்குக் குண்டு வைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல. ஆனால், எமது தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி,
இதுதான் உங்கள் சிந்தனை. அதற்குக் காரணம் நாங்கள் தமிழர்கள். கிளீன் ஸ்ரீலங்கா செயலணியில் ஒரு தமிழன், முஸ்லிம் இருக்கின்றார்களா? இல்லை இதுதான் உங்கள் நல்லிணக்கம், இவற்றைச் சொன்னால் நாங்கள் மோசமானவர்கள்.
அரசுடன் டீல் வைத்துக்கொள்ளும் தமிழ்ப் பிரதிநிதிகள் நல்லவர்கள் என்பார்கள்." - என்று அரசைக் கடுமையாகச் சாடினார் அர்ச்சுனா எம்.பி.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
