1991இல் இருந்து வரவு - செலவு திட்ட இலக்கை இலங்கை எட்டத் தவறியது - வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது

6 months ago

1991ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வரவு - செலவு திட்ட இலக்குகளை எட்டத் தவறியதன் காரணமாகவே வரவு செலவு திட்டப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

இதன்போது, வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டம் தொடர்பான அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில், அந்த அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலங்கையின் வரவு - செலவு திட்ட செயல்முறையின் பின்னணியை முன்வைத்து, 2024 வரவு - செலவு திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், 2023 வரவு - செலவு திட்டத்தின் வருமான இலக்கு சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வரி விகிதங்களின் அதிகரிப்பு மூலம் சேகரிக்க எதிர்பார்க்கப்படும் வருமானம் பற்றிய தரவுகள் இந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெறுமதி சேர் வரியின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் யதார்த்தமானதா என கணக்கெடுக்குமாறும் 2022 2024 காலப்பகுதியில் காணப்பட்ட பணவீக்கம் அரச வருமானத்துக்கு ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான அறிக்கை ஒன்றை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்குமாறு வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் சம்பிக்க ரணவக்க எம்.பி.

அத்துடன், அரசால் முன்மொழியப்பட்டுள்ள சொத்துகள் வரி தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றையும் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் வெரிடே ரிசேர்ச் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.


அண்மைய பதிவுகள்