யாழ்.தனங்கிளப்பு உப்பு உற்பத்தி நிலையத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டம்

2 months ago



யாழ்.தனங்கிளப்பு உப்பு உற்பத்தி நிலையத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டம்.

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் உப்பு உற்பத்தி நிலையத்தை மீளவும் ஆரம்பிக்கும் நோக்கில் தேசிய உப்பு நிறுவனத் தலைவர் ஹயன் வெல்லால நேற்று முன்தினம் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

புதிய அரசின் திட்டத்துக்கு அமைவாக உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தல், இறக்குமதிச் செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு அமைவாக கடந்த காலத்தில் சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இயற்கையாக உப்பு வளம் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது அங்கு உப்பு உற்பத்தி நிலையத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் இந்த உப்பளத் திட்டத்துக்குப் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் உரிய அனுமதிகள், பிரதேச சபையின் அனுமதி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் பயனாளிகள் தெரிவு ஆகியன இடம்பெற்ற போதிலும் சில காரணங்களால் தடைப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது மீளவும் அதனை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் ஊடாக பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

இந்த உப்பள நிறுவனம் தனியார், பொதுமக்கள் பங்குடமை நிறுவனமாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.