கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 30 பேரிடம் நேற்று விசாரணை
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் 30 பேரிடம் நேற்று வெள்ளிக்கிழமை பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது.
காணாமல் போனோர் பற்றிய பணிமனை (ஓ.எம்.பி.) இந்த விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் உறுப்பினர் தியாகராஜா யோகராஜா, நிறைவேற்று பணிப்பாளர் மூத்த சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் தலைமையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன.
இதன் போது கருத்துத் தெரிவித்த காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் உறுப்பினர்,
"காணாமல் போனோர் விவரங்கள் இதுவரையில் 21 ஆயிரத்து 630 இற்கு மேற்பட்ட விண்ணப்பப் படிவங்கள் கிடைத்துள்ளன.
விண்ணப்பப் படிவங்களில் பொலிஸார் மற்றும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் உள்ளனர்.
14 ஆயிரத்து 988 விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
6 ஆயிரத்து 688 விண்ணப்ப படிவங்கள் பூர்வாங்க விசாரணைகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளன.
இதில் 3 ஆயிரத்து 800இற்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவதாரிகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவு அவர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு அல்ல.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வழங்கப்பட்டது.
இதுவரையில் செய்து முடிக்கப்பட்ட பூர்வாங்க விசாரணைப்படி 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கான காணாமல் போனோர் சான்றிதழ் வழங்க பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலதிக விசாரணைக்காக 830 விண்ணப்பப் படிவங்கள் தொடர் விசாரணைகளுக்காக சமர்ப்பிக் கப்பட்டுள்ளன.
17 பேரின் விண்ணப்பப் படிவங்களில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது முழுமையாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், மூவர் உயிருடன் இல்லாததால் இவர்களுக்கு என்ன நடந்தது என்றறியவும் ஏனைய 14 விண்ணப்பப் படிவங்கள் தொடர்பில் விவரங்களை அறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.