தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்தும் அதில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மேலாதிக்க வகிபாகமும்

7 months ago

தமிழர்களின் பூர்விக வாழ்விடங்களான தமிழர் தாயகப் பகுதிகளையும் தமிழர்களது தாயகக் கோட்பாட்டையும் சிதைத்து அழிக்கும் முயற்சிகள் இன்று நேற்று அல்ல, இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை நாம் இலகுவில் கடந்து செல்ல முடியாது.

சில அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகக் கோட்பாடுகளை சிதைத்து ஈழத்தமிழர்களை வந்தேறு குடிகளாக பன்னாட்டு சமூகத்திற்கு காட்டுவதற்காகவே திட்டமிட்டு இந்தியாவில் இருந்து மலையகப் பகுதிகளில் வேலைக்காக தமிழர்கள் வரவழைக்கப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்டதாகவும் அதன் ஊடாக ஈழத்தழிழர்கள் பூர்வீகத் தாயகக் கோட்பாடு மாற்றப்பட்டு எல்லாத் தமிழர்களும் வந்தேறுகுடிகளாக உலகிற்கு காட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

இது ஒரு கற்பனைவாதமாக இருந்தாலும் சற்று சிந்திக்க வைத்த கருத்தாகவே பார்க்க வேண்டும்.

ஆனால் தமிழர்களின் பூர்வீக தாயகக் கோட்பாட்டை அழிக்கும் நோக்காகக் கொண்டு பல திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் , எல்லை நிர்ணயங்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் ஈழத்தமிழர்களின் அரசியல் பலம் வலுவிழந்து இருக்கின்ற வெளியில் பல முனைகளில் உக்கிரமடைந்து இருப்பதை காணமுடிகின்றது .

தற்போதைய காலகட்டத்தில் இலங்கையை மையப்படுத்திய பூகோள அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் , தமிழர்களின் அரசியலின் உறுதியற்ற பலவீனத்தாலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகப் பகுதிகளில் பல பகுதிகள் இலக்கு வைத்து விலைபேசும் நகர்வுகளையும், குத்தகையடிப்படையிலான உரிமை மாற்றங்களையும் பரவலாக காணமுடிகின்றது.

ஆனால் இந்த முயற்சி தமிழர் தாயகப் பகுதிகளில் மாத்திரம் இல்லை மாறாக முழு இலங்கையிலும் காணப்படுகின்றது.

காரணம் இலங்கை தன் இறையாண்மையை இழக்கும் ஆபத்தில் இருக்கும் நாடாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தி கூறுகின்றனர்.

இங்கு நாம் ஒரு விடயத்தை ஆழமாக பார்க்க வேண்டும். தமிழ் தேசிய அரசியலை பிரித்து கையாளும் நிலையில் பல நகர்வுகள் தற்காலத்தில் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தியா கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி தன் அரசியல் கட்டுப்பாட்டு நகர்வுகளில் முனைப்புக் காட்டுகின்ற அதேவேளை அமெரிக்கா சார் மேற்குலகம் வடக்கை மையப்படுத்திய அரசியல் கட்டுப்பாட்டில் அதிக நாட்டம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

இதனிடையே சீனா பாகிஸ்தான் ஊடாகவும், வர்த்தக தொடர்புகள் ஊடாகவும் கிழக்கு வாழ் இஸ்லாமிய சமூகத்தின் அரசியலை கட்டுப்படுத்துவதான சந்தேகங்களை சில அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில் வடக்கிற்கு மட்டும் மாநில ஆட்சி முறையொன்றை எதிர்காலத்தில் வழங்குவதற்காக கிழக்கின் தமிழ் தேசிய அரசியல் பலத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நகர்வுகள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எது எவ்வாறாயினும் தமிழர் தாயகப் பகுதிகளின் அரசியல் அமெரிக்கா, இந்தியா, சீனா நாடுகளின் அரசியல் கட்டுப்பாட்டு போட்டிகளுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாக சிதறப்போடும் பேராபத்து இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

எதிர் காலத்தில் தாயகப் பகுதிகளின் அரசியல் அமெரிக்கா சார் அரசியல், இந்தியா சார் அரசியல், சீனா சார் அரசியல் என கூறுபோட்டு பேசப்படும் பேராபத்தும் எம்மை நோக்கிய பெரும் சவாலான விடயமாகவே நோக்க வேண்டும்.

 *ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்....?*

ஈழத்தமிழர்கள் அரசியல் பலத்தை எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அதிகரித்தே ஆக வேண்டும்.

இதுதான் எமது தமிழ் தேசிய நிலைப்பாட்டை உறுதியாக்குவதற்கான ஒரே வழியாகும்.

எவ்வாறு உறுதியாக்குவது...?

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்குகள், கட்சி அரசியலுக்குள் சிக்குண்டு கோட்பாட்டளவில் துண்டாடப்பட்டு எமது மக்களின் அரசியல் குரலுக்கான வலு கேள்விக்குறியாக்கப்பட்டு அரசியல் அநாதைகளாகப்பட்டுள்ளார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

எமது மக்களின் இனப்பிரச்சினையை காரணம் காட்டி தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்காக கட்சிகளை ஆரம்பித்தவர்கள் இன்று இனப்பிரச்சனை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் எமது மக்களை வைத்திருக்கின்றார்கள்.

இங்கு ஒரு விடயத்தை நாம் எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தன் அரசியல் பலத்தால் போராடி பெறுவது மாறாக கொடுப்பதை பெறுவதல்ல .

இனப்படுகொலைக்கு உள்ளான இனம் என்ற அடிப்படையில் ஈழத்தமிழினம் தான் விரும்பும் எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொள்ள தகுதியுடைய இனமாகும் என்ற புரிதல் முதலில் ஈழத் தமிழர்களுக்கு வர வேண்டும்.

பின்னர்தான் வெளி சக்திகளுக்கு நாம் தெரிவிக்க வேண்டும்.

எனவே ஈழத்தமிழர்களுக்கு முன்னால் இருக்கின்ற பெரும் சவால் எமது மக்களின் அரசியல் பலத்தை நாம் எவ்வாறு அதிகரிப்பது என்பதாகும்.

எமது மக்களை தமிழ் தேசியத்தின் பக்கம் திரட்சி கொண்ட அரசியல் பலமிக்க சக்தியாக எவ்வாறு மாற்றுவது என்பதாகும்.

தற்காலத்தில் பெரிதும் பேசுபொருளாக இருக்கின்ற விடயம் தமிழ் பொது வேட்பாளர் என்ற தளத்தை நாம் வலுப்படுத்தி எமது மக்களை தமிழ் தேசிய அரசியலை ஓரணியில் திரட்சியாக்க வேண்டும்.

இதன் ஊடாக எமது மக்களின் அரசியல் மேலாதிக்க பலம் இந்த காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டே ஆக வேண்டும். இது காலம் எமக்கிட்ட கட்டளையாகவே பார்க்க வேண்டும்.

ஜீவரெத்தினம் தவேஸ்வரன்