மார்ச் மாதத்தின் பல நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலாக மழை

1 month ago



மார்ச் மாதத்தின் பல நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலை அவதானிப்பாளருமான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்தின் பல நாட்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் நாட்களாக அமையும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

அயன இடை ஒருங்கல் வலய செயல்பாட்டால் தூண்டப்பட்ட மேற்காவுகை (வெப்ப சலனம்) காரணமாகவே மார்ச் அதிகளவிலான மழை நாட்கள் நிலவ வாய்ப்புண்டு.

ஆனால், மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மழை மேற்காவுகை மழை என்பதனால் இடி, மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக மழை கிடைப்பது நீர் வள ரீதியாக எமக்கு நன்மையானது.

ஏனெனில், இந்த மழை எமது தரைக் கீழ் மற்றும் தரை மேற்பரப்பு நீர்வள மீள் நிரப்புகையில் அதிகம் செல்வாக்கு செலுத்தும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் சிறுபோக நெற் செய்கை இக்காலத்தில் ஆரம்பிக்கும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மழை நாட்களைக் கருத்தில் கொள்ளுமாறு விவசாயிகள் வேண்டப்படுகிறார்கள்.

இன்று 26ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் அதேவேளை இக் காலத்தில் வடக்கு கடற்பகுதிகள் அதிக உயரம் கொண்ட அலைகளைக் கொண்டதாக காணப்படும்.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவது சிறந்தது - என்றும் குறிப்பிட்டுள்ளார்.