கல்விப்புலம் மீதான வன்முறை நீதி கிடைக்காவிடின் போராட்டம் -- இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

அதிபர், ஆசிரியர்கள் மீது கொடூரமான முறையில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவிக்கையில்.
கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவுவேளை பயணித்துக்கொண்டிருந்தபோது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த காடையர் குழுவொன்றால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கல்விப்புலத்துக்கு தலைக்குனிவாகும்.
அத்துடன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் முல்லைத்தீவிலிருந்து. யாழ்ப்பாணம் நோக்கி ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம், ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின்மீது சட்டவிரோதமாக தாக்குல் நடத்தியோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இன்று ஒரு கல்வியலாளரின் உயிர் பறிக்கப்படுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
இது இலங்கையில், குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் சாதாரண மக்கள் கூட பாதுகாப்பாக பயணிக்க முடியாது என்ற நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.
இத்தகைய சம்பவங்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
எனவே கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
