ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று முதற்கட்ட சட்ட சபைத் தேர்தல் நடை பெற்றுவருகின்றது.

3 months ago


ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று முதற்கட்ட சட்ட சபைத் தேர்தல் நடை பெற்றுவருகின்றது.

காஷ்மீரில் 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது.

ஆனால், 2018ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து பா.ஜ.க. விலகியதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுலுக்கு வந்தது.

பின்னர், 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிர தேசங்களாகப் பிரித்தது.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் 2024 செப்டெம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவிட்டதையடுத்து தேர் தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மொத்த முள்ள 90 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. முதற்கட்டத் தேர்தலில் 24 தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், 3ஆம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகி றது. ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட தேர்தலில் 23 லட்சத்து 27 ஆயிரத்து 580 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 பேர் பெண்கள், 60 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்து 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மதியம் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

கிஷ்த்வாரில் உள்ள பக்வான் மொஹல்லாவில் உள்ள வாக்குச்சாவடி யில் வாக்காளர்களை அடையாளம் காண்பது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வாக்குப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.