காணி சுவீகரிக்க தடைவிதிப்பு

யாழ்ப்பாணத்தில் முப்படையினருக்காகவோ அல்லது பொலிஸாருக்காகவோ காணி சுவீகரிப்பை மேற்கொள்வதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் பரவலாக முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் நடாளுமன்ற உறுப்பினரான சி. சிறீதரன் கருத்து தெரிவிக்கையில், வலிகாமம் மேற்கு சுழிபுரம் திருவடிநிலையில் இரண்டு குடும்பங்களுக்குச் செந்தமான காணிகளை கடற்படையினர் தங்களின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாகவே இந்தச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நானும் கலந்துகொண்டுவிட்டே வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

 "மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றைப் படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கமுடியாது” என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, காணி சுவீகரிப்புத் தொடர்பில் அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு இறுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் தெரிவித்தனர்.

இணைத்தலைவர்களின் இந்த உத்தரவை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மறுஅறிவித்தல் வரும்வரையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வடக்குமாகாண சபை அவைத்தலைவர் சி. வீ. கே. சிவஞானம், பொலிஸ், இராணுவம் கடற்படை அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

சுகவீன விடுப்புப் போராட்டம் காரணமாக இலங்கை நிர்வாகசேவை அதிகாரிகள் எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்