தலசீமியா நோய்க்கான சிகிச்சையை கிழக்கு மாகாணத்தில் விஸ்தரிக்கும் முதன்மை நடவடிக்கையாக பிராந்திய தலசீமியா மையம் ஆரையம்பதி பிரதேச மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில், நோயாளர்களை அடையாளம் காணல், நோயாளர்களுக்கான இரத்தமாற்று சிகிச்சை, நோய்த் தடுப்பு ஆலோசனைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் உட்பட்ட பல்வேறு வகையான நோய்த் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான விசேட ஒருங்கிணைப்பின் தேவை கருதி அமைக்கப்பட்ட இந்த நிலையத்துக்கான நிதிப்பங்களிப்பை அயர்லாந்தைச் சேர்ந்த சோனியா லிஞ்ச் எனும் குழந்தையின் நினைவாக, பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தினர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
ஆரையம்பதி பிரதேச மருத்துவமனை பொறுப்பதிகாரி எஸ். குணராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிலையத் திறப்பு விழாவில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் பீ. மைதிலி உட்பட போதனா மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிராந்திய மருத்துவ அதிகாரிகள். பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை தொற்றா நோய் பொறுப்பு மருத்துவ அதிகாரி இ.உதயகுமார் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார். தலசீமியா, ஒரு நபருக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் மரபணு நோயாகும்.
ஹீமோகுளோபின் உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்தி குருதிச்சோகையை உண்டாக்குதலே இந்த நோய்க் குறியாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்ட இந்த நோயானது, நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் அதிகமான குழந்தைகளை பாதித்துள்ளதாகவும் கண்டறிப்பட்டுள்ளது.