உலகளாவிய ரீதியில் மனிதர்களை சாதி, மதம். இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும்.
இத்தினமே சர்வதேச மனித உரிமைகள் தினமாக 1948ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய மனித உரிமை தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பலரும் மறந்துவிட்டனர்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் கொண்டு வந்தன.
உலகமே உற்று நோக்கிய இந்த தீர்மானம் 21 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது.
இத்தீர்மானத்தை சீனா, பாகிஸ்தான் ரஷ்யா, கியூபா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்தன.
இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
சர்வதேச மனித உரிமைகள் தினம் தினம் சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் திகதி கடைபிடிக்கப்படுகின்றது.
ஐ.நா. பொதுச்சபை 1948ஆம் ஆண்டு இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. இத்தினத்திலும் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
2009 இல் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், முதலில் 2013 இல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
சர்வதேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு இலங்கை அரசு மறுத்தது.
இதுபோல, 2015 இலும் இன்னோர் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது சுயமாக விசாரணை நடத்துவதாக, இலங்கை அரசு அறிவித்தது.
இதை நிராகரித்து, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2021 இல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, 22 வாக்குகளும், எதிராக, சீனா உட்பட, 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
உலகத் தமிழர்கள் அனைவரும் உற்று நோக்கிய இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபையின் மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும், இத்தீர்மானத்தின் தாக்கம் என்ன என்பதும், இதனால் என்ன எதிர்காலத்தில் நடக்கும் என்பதையும் தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமை பிரகடனம் தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள தீர்மானங்கள் உருவாவதற்குரிய, உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனமானது என்பது பற்றிய ஓர் பார்வையை இக்கட்டுரை தருகின்றது.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனமானது மனித அடிப்படை உரிமைகளின் வரலாற்றில் பாரிய தாக்கங்களை கொண்டுவந்த ஒரு ஐ.நா. சாசனமாகும்.
1948 செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபையிள் தீர்மான இலக்கம் 217 ஏ மூலம் இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் சர்வதேச மனித உரிமை பிரகடனம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்த உரிமை பிரகடனம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.
தனிமனித கௌரவமும் ஊறுபடுத்தப்பட முடியாத அடிப்படை உரிமைகளும் உலகிற் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பன நிலவுதற்கு அடிப்படையாகவுள்ளதாலும், மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளிக்க முடியாது.
பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வறுமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துய்க்கத்தக்க இலட்சிய வாழ்வொன்றின் உருவாக்கமே மனித குலத்தின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.
மனித உரிமை பாதுகாக்கப்படுவது அவசியம்
கொடுங்கோன்மைக்கும். அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்யும் நிலைக்குத் தனிமனி தன் தள்ளப்படாமலிருக்க, வேண்டுமெனில் சட்டத்தின் ஆட்சி மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அத்தியாவசியமாகும்.
நாடுகளிடையேயான நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதும் வளம்படுத்தப்படுவதும் மேலியம்பிய இவ்வடிப்படையில் அமைதல் இன்றியமையாததாகும்.
ஐக்கிய நாடுகள் சபையும் அதனிற் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள மக்களும், அடிப்படை மனித உரிமைகள் பற்றிய அனைவரின் நம்பிக்கையையும் தனிமனித கௌரவம், அவ்வாழ்வின் பெறுமதி, ஆண்கள் பெண்களிடையேயான சமத்துவம் ஆகியவற்றினை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கைத் தர உயர்வு ஆதியவற்றைப் பட்டயம் ஒன்றின் மூலம் உருவாக்க வேண்டும்.
மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முழுமையாகச் செயற்படுத்தவென அங்கத்துவ நாடுகள் உறுதி கொண்டுள்ளன.
இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய புரிந்துணர் விருத்தல் முக்கியம் என்பதாலும், இதனை ஐ.நா. பொதுச்சபையானது பிரகடனப்படுத்துகின்றது.
சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு ஏற்பாட்டு அமைப்பும், இவ்விலட்சியங்களை இடையறாது மனத்திருத்தி. இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதிப்பை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கற்றுணர வேண்டும்.
தேசிய மற்றும் சர்வதேசிய வகையில் நிலை கொண்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் தேவையை நோக்கி, அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் குடிமக்களிடையேயும், தங்கள் நியாயாதிக்கத்தின் கீழ் வரும் ஆட்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழுமையாகவும் பயனுறுதிப்பாடும் கொண்ட முறையிலும் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்த வேண்டும்.
சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனை இலக்கின் ஏற்புடை அளவாகக் கொள்ளப்பட வேண்டியதென வகையிலமைந்த இந்த மனித உரிமைகளுக்கான உலகப் பொதுப் பிரகடனத்தைப் ஐ.நா. பொதுச் சபையானது பரிந்துரைக்கின்றது.